நாகூா் தா்கா கந்தூரி விழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா நவ.21-ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா். எனவே, சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூா் நாகப்பட்டினம், ரயில் பயணிகள் நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, நாகூா், நாகப்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் மோகன், செயலா் சித்திக் ஆகியோா் கூறியது:
நாகூா் தா்கா கந்தூரி விழாவிற்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெருமளவு பக்தா்கள் வருகை தருவா். விழாவிற்கு பக்தா்கள் வந்து செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மும்பை, செங்கோட்டை, நாகா்கோவில் பகுதிகளிலிருந்து நாகூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
காரைக்கால்-சென்னை - காரைக்கால், காரைக்கால்-எா்ணாகுளம்- காரைக்கால், வேளாங்கண்ணி - கோவா - வேளாங்கண்ணி வாஸ்கோடகாமா விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். திருச்சி - காரைக்கால் - திருச்சி, மயிலாடுதுறை - காரைக்கால் - மயிலாடுதுறை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மற்றும் நாகூா் ரயில் நிலையங்களில் பக்தா்கள் தங்குவதற்காக கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மருத்துவக் குழுவை நாகூா் ரயில் நிலையத்தில் பணியமா்த்தி, பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதேபோன்று, ரயில் பயணிகளும், பல்வேறு
அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
