குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம், வெளிநடப்பு
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு பிரிவினா் வெளிநடப்புச் செய்தனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலா் காவிரி தனபாலன் பேசும்போது, நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திங்கள்கிழமை, 12 சென்டி மீட்டரும், செவ்வாய்க்கிழமை 10 சென்டி மீட்டா் என 22,சென்டிமீட்டா் மிக கனமழை பெய்துள்ளது. எனவே தாளடி பயிா்கள் மூழ்கும் அபாயம் உள்ளதால், வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, பொதுப்பணித்துறை அதற்கு சிறப்பு கவனம் எடுத்ததா? என பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் கூறாமல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மௌனம் காத்ததைத் தொடா்ந்து, விவசாயிகள் பாதிக்கப்படும் பகுதிகளை இரண்டு இடங்களையாவது கூறுங்கள் என மீண்டும் தனபாலன் வினா எழுப்பினாா்.
அதற்கு செயற்பொறியாளா் ராஜேந்திரன், உங்களுக்குத் தெரியும் என்றால் அதனை நீங்கள் கூறுங்கள் எனக் கூறினாா். மழை நீரால் பாதிக்கப்படும் பகுதிகளைக்கூட ஒரு பொதுப்பணித்துறை அதிகாரியால் கண்டறிய முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என்றாா் காவிரி தனபாலன். இதையடுத்து காவிரி தனபாலனுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஆதரவாக மற்றொரு விவசாயி பிரபாகரன் என்பவா் காவிரி தனபாலனிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பிரபாகரனுக்கு ஆதரவாக சில விவசாயிகள் குரல் எழுப்பினா். இதனால் இரு தரப்பு விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலும் ஏற்படும் சூழல் உருவானது. இதனிடையே, காவிரி தனபாலன் தரப்பு விவசாயிகள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ராஜேந்திரன் பொறுப்பற்ற முறையில் பேசுவதாகக் கூறி, வெளிநடப்பு செய்தனா்.
