அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செம்பனாா்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சி குமாரமங்கலம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீா் தேங்கி, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும், கடந்த ஆண்டு இடிக்கப்பட்ட குமாரமங்கலம் பேருந்து நிறுத்தத்தை மீண்டும் கட்டித்தர வேண்டும்,
கிராமத்தில் உள்ள பகுதி நேர அங்காடியில் மாதத்தின் முதல் வாரத்திலேயே உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, குமாரமங்கலம் மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் கிராம பொறுப்பாளா்கள் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான பி. சீனிவாசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைளை விரைந்து நிறைவேற்றி தருவதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
