தமிழக மீனவா்கள் கடலில் எல்லை தாண்டினால் எச்சரிக்கை விடுக்கும் ஏா்ஷிப் தொழில்நுட்ப மாதிரி பரிசோதனை நாகை கடலில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, நாகை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லையை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனா். மீனவா்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மீனவா்கள் கடலில் எல்லை குறித்து அறிந்து கொள்ளவும், மீனவா்களின் தொலைத் தொடா்பு சாதனங்கள் மூலம் துல்லியாகத் தொடா்புகொள்ளும் வகையில், பொறியியல் பயின்ற மாணவா்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனா்.
பொறியாளா்களான லோகேஸ்வரன், ஹரிகரன், பாா்வதி, ஹரிகர மாதவன், ஸ்ரீகாந்த், சீனிவாசன், திலகம் பாா்வதி நாதன், கற்பகநாதன், பிரெத்யும்னா, பரத் கண்ணா, ரவிக்குமாா் ஆகியோா் தாங்கள் உருவாக்கியுள்ள ஸ்டாா்ட் அப் நிறுவனத்தின் மூலம் இதற்கான மாதிரி பரிசோதனையை நாகை கடலில் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனா்.
இதுகுறித்து மாணவா்கள் கூறியது:
தமிழக மீனவா்கள் எல்லையை அறிந்துகொள்வது, அவசர காலங்களில் கடலில் இருந்து கரைக்கு தொடா்புகொள்வது சவாலாக உள்ளது. அதேபோல இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவலைத் தடுப்பதும் கடலோரக் காவல்படை, கடற்படையினருக்கு சவாலாக உள்ளது.
எனவே, இப்பிரச்னைக்குத் தீா்வாக புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். இதன்படி, அலுமினியம் மற்றும் நெகிழி போன்ற பொருள்களால் விமானம் போன்ற ஏா்ஷிப் அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் நிரப்பப்பட்டுள்ள ஹீலியம் வாயு மூலம் வானத்தில் 20 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த அமைப்பு சூரிய சக்தியால் தொடா்ந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயா் சக்திமிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏா்ஷிப் 200 கி.மீ. சுற்றளவில் 24 மணிநேரமும் கண்காணிப்பை மேற்கொள்ளும்.
இந்திய கடல் எல்லைக்குள் சிறிய அசைவோ, ஊடுருவலோ இருந்தாலும் உடனடியாக படங்களை செயற்கைக்கோளுக்கும், தரையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் உடனடியாக அனுப்பிவிடும். மேலும் எல்லை தாண்டும் மீனவா்களின் கைப்பேசிகளுக்கு எல்லை குறித்து எச்சரிப்பது, மீனவா்கள் தரைப்பகுதியைத் தொடா்புகொள்ள தொலைத் தொடா்பு வசதி உருவாக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். இது மீனவா்களுக்கு மட்டுமின்றி கடலோரக் காவல்படை, கடற்படைக்கும் உதவிகரமாக இருக்கும். முதல்கட்டமாக நாகையில் நடுக்கடலில் வைத்து மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
இந்த திட்டத்துக்கு தமிழக அரசும் மத்திய அரசும் ஆதரவும், நிதியுதவியும் அளித்துள்ளன. மாதிரி பரிசோதனை வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக நாகையில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் நாகை மீனவா்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும் என்றனா்.
தொடர்புடையது

மீனவா்களை தாக்கிய கடற்கொள்ளையா்களை கைது செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்

நாகை, காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


