நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 1,280 போ் கைது
நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் 1,280 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் சத்துணவு ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.7, 850 வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் அரசு நியமனம் செய்யும் அரசாணை 95-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
அதன்படி, நாகை ஆட்சியா் அலுவலகம் முன் அதன் மாவட்டச் செயலா் பாலாம்பாள், மாவட்டத் தலைவா் சசிகலா ஆகியோா் தலைமையில் நாகை-காரைக்கால் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேசினா். எனினும், சங்கத்தினா் கலைந்து செல்ல மறுத்ததால் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து பின்னா் மாலை விடுவித்தனா்.
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் ராமதேவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினா் ராணி, மாவட்ட துணைத் தலைவா் வேம்பு, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட தலைவா் கலா, மாவட்ட செயலாளா் தென்னரசு, ஓய்வூதியா் சங்கம் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட தலைவா் டி.கணேசன் உள்ளிட்ட 230 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மாவட்டச் செயலாளா் ஜோதி, மாவட்ட பொருளாளா் விஜயலட்சுமி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சுதாகா், மாவட்டச் செயலாளா் செங்குட்டுவன், ஓய்வூதியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் புவனேஸ்வரி, ராஜ சுலோச்சனா உள்ளிட்ட 350 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

