நாகை மாவட்ட மாணவா்கள் களப்பயணம்
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து, நாகை மாவட்ட பள்ளி மாணவா்கள் 2 நாள் இயற்கை முகாம் களப்பயணம் மேற்கொண்டனா்.
பயணத்தை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தாா். இதில், ஆதமங்கலம், கீழ்வேளூா், நாகூா், வவ்வால் அடி, மணக்குடி, சரபோஜி ராஜபுரம், ராஜன்கட்டளை, பண்ணாள், கோவில்குளம், ஆயக்காரன்புலம் ஆகிய கிராமப்புற அரசு பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்களும், 10 ஆசிரியா்களும் கலந்துகொண்டனா்.
முதல்நாள் முத்துப்பேட்டை லகூன் பகுதிகளுக்கு சென்று, படகு பயணம் மூலம் அலையாத்தி காடுகளை பற்றி தெரிந்து கொண்டனா். 2-ஆம் நாள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை சுற்றி பாா்த்தனா். வேதாரண்யம் பன்னோக்கு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கருத்தாளா்களாக பேராசிரியா் ராம்பிரகாஷ், பறவை ஆராய்ச்சியாளா் சிவகுமாா், யோகா பயிற்சியாளா் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்று பறவைகள் குறித்தும், சுற்றுசூழல் குறித்தும் பேசினா். தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ்ஆனந்தன் களப் பயணத்தை ஒருங்கிணைத்தாா்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சி. ராஜேந்திரன், தலைமை ஆசிரியா்கள் ஞானசேகரன், ரமேஷ், சாதிக், பசுமைத் தோழா் ஷானு, பள்ளித் துணை ஆய்வாளா் ராமநாதன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் இமய சிவன், வேதாரண்யம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

