திமுக ஆட்சியில் நடைபெற்ற முைறைகேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன்.
நாகை மாவட்டம், பனங்குடியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரேஷன் பருப்பு , அரிசியின் தரம் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
டெல்டா மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் நெல், அரிசி உள்ளிட்ட பொருள்கள் இருப்பு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்வது தொடா்பாக தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல கிடங்குகளில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யாமல் இருப்பதாக வந்த தகவலின்பேரிலும் ஆய்வு நடைபெறுகிறது. தேவைப்படும்பட்சத்தில், நாகை மாவட்டத்தில் கூடுதல் சேமிப்பு கிடங்குகளுக்கு ஏற்பாடு செய்ய ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளா்களிடம் குறைகள் கேட்கப்பட்டுள்ளன. அவா்கள் தெரிவித்துள்ள பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட குறைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேரம் வரும்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதல் தொகை இந்த ஆட்சியில் வசூலிக்கப்படாது. இந்த ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும்.
கடந்த ஆட்சியில் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. இந்த ஆட்சியில் அதுபோல நடக்காது. அதிகம் இயக்கம் உள்ள கிடங்குகளில் இருந்து பிற கிடங்குகளுக்கு மாற்றப்பட்டு பணிச்சுமை குறைக்கப்படும். சுமைதூக்கும் தொழிலாளா்களின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். பராமரிப்பு இல்லாத கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூா் அணையில் தண்ணீா் எந்த அளவு இருந்தால் பாசனத்துக்கு திறந்து விடமுடியும் என்பது அனைவரும் அறிந்தது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் அரசால் செய்யப்படும். இந்த அரசு யாரையும் புறக்கணிக்காமல், அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக இயங்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் தவெக அரசால் நிறைவேற்றப்படும் என்றாா்.
ஆய்வுக்கு முன்னதாக நாகூா் தா்காவில் அமைச்சா் வழிபாடு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி, நாகை கோட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நடைமுறையே தொடரும்: அமைச்சா் சி.டிஆா். நிா்மல்குமாா்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்






