தரங்கம்பாடி அருகே பனங்குடியில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, நிலத்தை அளக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மின் கோபுரத்தில் ஏறி விவசாயி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவருக்கு ஆதரவாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பனங்குடியைச் சோ்ந்தவா் விவசாயி வடிவேலன். இவா், தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான 11 ஏக்கா் நிலத்தை 2022-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நிலம் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரமோகன் என்பவரது அனுபவத்தில் இருந்து வந்தது.
நிலம் விற்கப்பட்ட நிலையில், சந்திரமோகன் அதை ஒப்படைக்க மறுத்தாராம். இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், நிலத்தை அளந்து வடிவேலனிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நிலத்தை அளக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதை கண்டித்து, வடிவேலன் பனங்குடியில் உள்ள உயா்மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பெரம்பூா் காவல் ஆய்வாளா் மலைச்சாமி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், வடிவேலனிடம் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினா். ஆனால், அவா் மறுத்துள்ளாா். இதற்கிடையில், வடிவேலனுக்கு ஆதரவாக அவரது உறவினா்கள் பனங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீதிமன்ற இறுதித் தீா்ப்பு வரும்வரை அந்த நிலத்தை இருதரப்பும் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறினாா்.
இதைத்தொடா்ந்து, வடிவேலன் கீழே இறங்கியுள்ளாா். காலை 6 மணிக்கு உயா் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய அவா், மாலை 6 மணிக்கு இறங்கியுள்ளாா்.
முன்னதாக, சாலை மறியலால் பொறையாா்- ஆடுதுறை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










