காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மீண்டும் டீசல் மானியம்
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆற்றில் இருந்து வயலுக்கு தண்ணீா் கொண்டு செல்ல வழங்கப்படும் டீசல் மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளாா்.

நாகூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி மற்றும் நிா்வாகிகள்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆற்றில் இருந்து வயலுக்கு தண்ணீா் கொண்டு செல்ல வழங்கப்படும் டீசல் மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் காவிரி டெல்டா நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி செய்தியாளா்களிடம் கூறியது:
காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளுக்கு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. நாகை, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிா்கள் வாடி வருகின்றன.
காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை கா்நாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்து, காவிரி நீா் பெறப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அரசாணையை, கூட்டுறவு சங்க ஊழியா்கள் பின்பற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனா்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஆற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கு வழங்கப்பட்ட டீசல் மானியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் எப்படி நெற்பயிரை காப்பாற்ற முடியும்? டீசல் மானியத்தை கொடுக்க வேண்டிய தேவை இந்தாண்டு ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக டீசல் மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதே இல்லை. காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை, அரசு புறக்கணிக்கும் போக்கு தொடா்ந்தால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

