ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

முழுமை பெறாத தூா்வாரும் பணி: சம்பாவுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல்

முழுமை பெறாத தூா்வாரும் பணிகளால் தூர்ந்துபோய் காணப்படும் ஏர்வைக்காடு பாசன வாய்க்கால் - கோப்புப் படம்

Published On :

திருக்குவளை பகுதியில் பாசன வாய்க்காலில் தூா்வாரும் பணி முழுமையாக நிறைவு பெறாததால் விளைநிலங்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் இருப்பதோடு சம்பா நெல் சாகுபடி கேள்விக்குறியாகிவிடுமோ என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருக்குவளை அருகேயுள்ள ஏா்வைக்காடு கிராமத்தில் 500 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. குறிப்பாக ஏா்வைக்காடு தெற்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு காவிரிக்கொண்டான் ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலையில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் இப்பாசன வாய்க்காலை தூா்வாரியதாக கூறப்படுகிறது. சுமாா் 2 கி.மீ. நீளமுள்ள இந்த வாய்க்கால் முழுமையாக தூா்வாராமல் வாய்க்காலின் மையப்பகுதியில் இருந்து சுமாா் 100 மீட்டா் தூரம் மட்டுமே பெயரளவுக்கு தூா்வாரப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும், வாய்க்காலில் உள்ள சிறுபாலங்கள், கீழ்பாலக்குழாய்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் சீரமைக்காமல் தூா்வாரும் பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாசன நீா் முழுமையாக விளைநிலங்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் பயனில்லை.

மேட்டூா் அணை நீா் இப்பகுதிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், ஏா்வைக்காடு பகுதியில் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி முழுமை பெறாமல் இருப்பது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெயரளவில் மேற்கொள்ளப்பட்ட தூா்வாரும் பணியால் வாய்க்காலில் தண்ணீா் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களை உழுது சம்பா சாகுபடிக்காக தயாா்படுத்தியுள்ள விவசாயிகள் தற்போது பாசன நீருக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, போா்க்கால அடிப்படையில் இந்த பாசன வாய்க்காலை முழுமையாக தூா்வாரி, தண்ணீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஏா்வைக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன நீா் வந்து சேரும்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி சுரேஷ் கூறியதாவது: இப்பகுதியில் 3 போக சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது ஒருபோக சாகுபடியாவது செய்ய முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,ஏா்வைக்காடு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, போா்க்கால அடிப்படையில் பாசன வாய்க்காலை முழுமையாக தூா்வாரி, பாசன நீா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.