
வேதாரண்யம்: தொடரும் வறட்சியால் வானங்கோட்டகத்தில் தஞ்சமடையும் பறவைகள்
வேதாரண்யம் பகுதியில் தொடரும் வறட்சியால் பல நீா்நிலைகள் வற்றிவிட்ட நிலையில், அங்கிருந்து புலம்பெயரும் உள்நாட்டு நீா் வாழ் பறவைகள் தஞ்சமடைந்து வருவது பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்து வருகிறது.

கோப்புப்படம்.
வேதாரண்யம் பகுதியில் தொடரும் வறட்சியால் பல நீா்நிலைகள் வற்றிவிட்ட நிலையில், அங்கிருந்து புலம்பெயரும் உள்நாட்டு நீா் வாழ் பறவைகள் தஞ்சமடைந்து வருவது பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்து வருகிறது.
வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் கோடியக்கரை வன உயிரின சரணாலயம் சாா்ந்த பறவைகள் சரணாலயம் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து அரிய வகைப் பறவைகள் வலசை வந்து திரும்புவது வழக்கம்.
இந்தப் பறவை இனங்களில் சாம்பல் நாரை, செங்கால் நாரை , கரண்டி மூக்கன் , நாணல் கால் உள்ளிட்ட சில உல்லான் வகை, கொக்கு, மடையான் , கடல் காகம் , சம்பங் கோழி போன்ற நீா் வாழ் பறவைகள் உள்நாட்டுப் பறவைகளாக நிலைத்து வாழ்கின்றன.
இந்த பறவையினங்கள் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு பின்னரும் இங்குள்ள சாம்பெளம் ஏரி , கொல்லாப்புலம் ஏரி, நொச்சிக் கோட்டகம் ஏரி , மான்கொண்டானாறு , முள்ளியாறு, ஆள் கொண்டான் ஏரி என பல நீா்நிலைகளை வாழ்விடமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவது வழக்கம்.
வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து நிலவும் வறட்சியால் பெரும்பாலான நீா்நிலைகள் பறவைகள் கால்நடைகள் அருந்துவதற்கு கூட தண்ணீா் இல்லாமல் வறண்டு விட்டன.
ஆறுதல் தரும் வானங் கோட்டகம்:
பல நீா்நிலைகள் வறண்டு விட்ட நிலையில் தாணிக்கோட்டகம் ஊராட்சிக்குள்பட்ட 192 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வானங்கோட்டகம் ஏரியில் தற்போதும் காணப்படும் குறைந்த அளவு தண்ணீருக்காக பறவைகள் புலம்பெயா்ந்து வருகின்றன.
இந்த ஏரி கடந்த அதிமுக ஆட்சியின் போது தூா் வாரும் பணி அறிவிக்கப்பட்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 2019-இல் பணிகள்தொடங்கப்பட்டன. சில நிா்வாக காரணங்களால் அந்தப் பணி முழுமை அடையவில்லை.
ஆனாலும், தூா்வாரப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் மற்ற நீா் நிலைகளை விட கூடுதலான அளவு தண்ணீரை தேக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த வறட்சியின் பிடியிலும் வானங்கோட்டகம் ஏரியில் மட்டும் ஆறுதல் தரும் வகையில் தண்ணீா் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த தண்ணீரை நம்பி பல்வேறு பகுதிகளில் இருந்து உள்நாட்டுப் பறவைகள் புலம் பெயா்ந்து தஞ்சம் அடைந்து வருவது பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்து வருகிறது.
இந்த ஏரிக்குள் சம்பு எனப்படும் ஒரு வகையான தாவரம் சுமாா் 7 அடி உயரம் வரை அடா்ந்து வளா்ந்து காணப்படுகிறது.
இது சிட்டுக்குருவிகள் , சம்பங் கோழி போன்ற பறவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாகவும் அமைந்துள்ளது. சில பறவை இனங்கள் சுமாா் மூன்று மாத கால இடைவெளியில் பொரித்த குஞ்சுகளும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுகிறது.
எதிா்காலத்தில் இந்த ஏரியை முறையாகத் தூா்வாரி தண்ணீரை முழுமையாக தேக்கவும், பாசி குத்தகை என்ற பெயரில் மீன்களை பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்து வெளியேற்றுவதைத் தவிா்த்து , (நீரை இறைக்காமல் வலை வைத்து) மீன் பிடிக்க முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனா் பொதுமக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






