பாசனத்துக்கு சரியாக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், கடைமடை பகுதி சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதியளித்தார்.
காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில், மன்னார்குடியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக மேடை அமைக்கப்படவுள்ள தேரடி திடலை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருப்பதுடன், குறித்த காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கியும் வருகிற செப்.1-ஆம் தேதி, திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் மன்னார்குடியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேச உள்ளார்.
பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிக்கு இன்னும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டில் சிறிதும் உண்மையில்லை. குற்றம் சொல்பவர்கள் யார் என்று முதலில் பார்க்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாரவும், பராமரிப்பு பணிக்காகவும் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பாய்ச்சல் பகுதி எனப்படும், பாசன ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் இன்னும் ஒரு மாதம் கழித்துதான் தண்ணீர் விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், வடிகால் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சரியான திட்டமிடலுடன், முறையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்யும் மழை ஒரு மாதத்துக்கு முன்பே பெய்திருந்தால், டெல்டா மாவட்டத்தில் குறுவைக்கு பயன்பட்டிருக்கும். ஆழ்துளைக் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்துவருபவர்கள் மட்டும்தான் தற்போது வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
சம்பா பயிரை பொருத்தவரை இனிமேல்தான் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவார்கள். தற்போது, நாற்றங்கால் நடும் பணி நடைபெற்றுவருவதால், அதற்கு மட்டும்தான் தண்ணீர் தேவை உள்ளது. சம்பா சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்ய இன்னும் சில நாள்கள் உள்ளது. அதற்குள் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவுக்கு தண்ணீரை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக சில வழிமுறைகள், விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கான ஆணையர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க, மாநில அரசு மாவட்டம் வாரியாக அலுவலர்களை நியமித்துள்ளது. மத்திய அரசு எந்த அதிகாரியையும் நியமிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பொது விநியோகத் திட்டம், தமிழகத்தில் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதைப் பாராட்டி, தமிழக அரசு, உணவுத் துறைக்கு சிறந்த ஆளுமைக்கான விருதை வழங்கியுள்ளது. துரித நடவடிக்கையால் ஒரே ஆண்டில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கியிருப்பது மிகப் பெரிய சாதனையாகும்
என்றார்.
பேட்டியின்போது, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கா.தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி), கோ.அரிகிருஷ்ணன் (நீடாமங்கலம்), நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி.குமார், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் பொன்.வாசுகிராம், நகர்மன்ற முன்னாள் தலைவர் டி.சுதா அன்புச்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


