தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்
திருவாரூர் மாவட்டத்தில், முதன் முதலாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாகவுள்ளதால், அப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில், முதன் முதலாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாகவுள்ளதால், அப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியது: தமிழகத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இவை தமிழகத்தில் முதன் முறையாக பொள்ளாச்சி பகுதிகளில் 2016-ஆம் ஆண்டு கண்டறிப்பட்டது. தற்போது, முதன் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிப்பட்டு இதன் குஞ்சுகள் இலைச் சாற்றை உறிஞ்சி 30 நாள்களில் முழு வளர்ச்சி பெற்று ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவ்வகை ஈக்கள் கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படும். இந்த ஈக்களிலிருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் இலைகள் மீது படர்ந்து கேப்னோடியம் என்ற கரும்பூசணம் வளர ஏதுவாகிறது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையும் வாய்ப்புள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்: மஞ்சள் நிறத்திலான பாலித்தீன் தாள்கள் (ஒட்டுப்பொறிகள்) வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. எனவே, 3 அடி நீளம் மற்றும் 1 அடி அகலமுடைய பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னை தோட்டங்களில் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.
பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும், கிரைசோபர்லா இரை விழுங்கிகள் இப்பூச்சிகளின் வளர்ச்சி நிலையை நன்றாக உட்கொள்வதால் ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் இதை ஹெக்டேருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய் 30 மில்லி லிட்டர் அல்லது அசாடிராக்டின் 1 சதவீதம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் ஒட்டுத் திரவத்துடன கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலைக் குறைக்க வேண்டும். இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது கிரைசோபர்லா இரைவிழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே உருவாக ஆரம்பிக்கும்.
அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது இயற்கை எதிரிகள் அழிந்து விடும். எனவே, பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து இயற்கை எதிரிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும்.
எனவே, தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சி நடமாட்டத்தை கண்காணித்து உரிய அவசர கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...