தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அடிப்படை வசதிகளின்றி நீடாமங்கலம் கிளை நூலகம்..!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டுவரும் கிளை நூலகத்துக்கு,

News image
Updated On :30 ஆகஸ்ட் 2019, 1:33 am

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டுவரும் கிளை நூலகத்துக்கு, நவீன வசதிகளுடன்கூடிய புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என நூலகப் பயன்பாட்டாளர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழக அரசு 5 ஆயிரம் மக்கள் தொகையுள்ள ஊர்களில் நூலக ஆணைக்குழு அமைத்து கிளை நூலகம் தொடங்கிட முடிவு செய்தது. அதன்பேரில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கிளை நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நீடாமங்கலம்  தாலுகாவின் தலைநகரமாகும். இங்கு நீதிமன்றம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் பல உள்ளன. தற்போது, நீடாமங்கலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நீடாமங்கலத்தில் 29.6.1963 -ஆம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. கிளை நூலகம் முதலில் நீடாமங்கலம் சீனிவாசம் பிள்ளை சத்திரம் கட்டடத்தில் வாடகையின்றி அக்குடும்பத்தினரால் இடம்கொடுக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியது.
மின் இணைப்பு செலவினங்களை வீரையாபிள்ளை குடும்பத்தினர் ஏற்றனர். நீண்டகாலமாக அந்த கட்டடத்தில் நூலகம் இயங்கி வந்தது. அதன் பின்னர், காவல் நிலையம் அருகில் வாடகை கட்டடத்தில் நூலகம் இயங்கியது. மேலும்,  பொதுப் பணித் துறையால் கட்டப்பட்ட கட்டடத்தில் நூலகம் 20.11.1998 முதல் இயங்கி வருகிறது.
இந்த நூலகத்தில் 4,170 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 60 பேர் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலர்களாக உள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 100 பேர் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படித்துச் செல்கின்றனர்.
35 பேர் நூல்களை இரவலாகப் பெற்று படிக்கின்றனர். 34,233 நூல்கள் உள்ளன. இந்த நூலகம், 2009 -ஆம் ஆண்டு முதல் காலை 8 முதல் இரவு 8 மணி வரை முழுநேர நூலகமாக இயங்கி வருகிறது. மேலும், அதே ஆண்டு முதல் இணையதள சேவையும் உள்ளது.
தற்போதுள்ள நூலகக் கட்டடம் போதுமானதாக இல்லை. கட்டடம் பல இடங்களில் விரிசலடைந்துள்ளது. நவீன வசதிகளுடன்கூடிய கட்டடம் அமைந்தால் வாசகர்களுக்கு, படிக்க ஏற்ற இடமாக இருக்கும். தற்போதுள்ள கட்டடம் ஆங்காங்கே விரிசலடைந்து நூல் நிலையத்தின் கட்டடம் விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட பலமுறை கோரிக்கை வைத்தும் மக்கள் பிரதிநிதிகள் அதில் ஆர்வம் செலுத்தவில்லை. நூலகக்  கட்டடம் கட்ட இடமில்லை என காரணம் சொல்லப்படுகிறது. அதேசமயம், அரசு இடமெல்லாம் கவனிப்பாரற்ற நிலையில், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சத்திரம் இலாகாவுக்குச் சொந்தமான பல இடங்கள் இன்று தனியார் வசம் உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சத்திரம் இலாகா இடங்களை கைப்பற்றினால், நீடாமங்கலத்தில் எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தேவையான இடம் கிடைக்கும் என  சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வளர்ந்து வரும் சமூக கட்டமைப்புக்கேற்ப நூலகத்துக்கு அடிப்படை வசதிகளுடன்கூடிய கட்டடம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நூலகக் கட்டடம் உள்ளதால், அதிக வாசகர்கள் பயனடைய முடியாமல்போகிறது.
இதுகுறித்து கிளை நூலக வாசகர்கள் கூறியது:
நீடாமங்கலத்தில் கிளை நூலகம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால், கிளை நூலகக் கட்டடம் போதுமானதாக இல்லை. நூலகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான நூல்களை பாதுகாப்பது அவசியமானதாகும்.
அதற்கு நவீன வசதிகளுடன்கூடிய புதிய கட்டடம் தேவை. புதிய கட்டடத்தை ஊரின் மத்தியில் கட்டினால், மேலும் பல வாசகர்களை ஈர்க்க முடியும். நீடாமங்கலம் வடக்கு வீதியில் புதிய நூலகக்  கட்டடம் அமைந்தால், சிறப்பாக இருக்கும். எனவே, நீடாமங்கலம் வடக்கு வீதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் நூலகக் கட்டடத்தை கட்ட அரசு முன்வர
வேண்டும். 
வடக்கு வீதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் மாடு அடைக்கும் பட்டிக்குரிய இடமாக கூறினாலும், மாடு அடைக்கும் பட்டிக்கு ஊரின் மத்தியில் இடம் தேவையில்லை. அதை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரிய கவனம்
செலுத்த வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.