சாலைப் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? 

சாலைப் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றாததால், இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும்

சாலைப் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றாததால், இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வேதனையளிக்கிறது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சாலைப் பாதுகாப்பு வார விழாவில், குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது, இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அதிவேகமாகவும், செல்லிடப்பேசி பேசிக் கொண்டும் வாகனத்தை ஓட்டக் கூடாது, தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் போன்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. நிகழாண்டு 30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
காவல் துறை, போக்குவரத்துத் துறை பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்புடன் நடத்தும் சாலைப் பாதுகாப்பு வார விழாவினால் மக்களிடம் இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ? அதனால் வாகன விபத்துக்கள் குறைந்திருக்கிறதா என்றால் இல்லையென்று கூறும் வகையில் ஆண்டுக்கு ஆண்டு வாகன விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருப்பதே இதற்கு உதாரணம். ஆண்டுதோறும் இவ்விழா சம்பிரதாயத்துகாக நடைபெறுகிறதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
இந்தியாவில் தமிழகம் சாலை விபத்துகளில் முதலிடத்தில் உள்ளதாகவும், உலகிலுள்ள அனைத்து வாகனங்களில் இந்தியா வில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது, ஆனால் உலகளவில் நிகழும் விபத்துகளில் இந்தியாவில் 15 சதவீதம் என்று புள்ளி விவரம் தெரிவிப்பது வேதனையளிக்கிறது. மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை முறையாக பின்பற்றாதது விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்த, சாலை விதிகளை மீறுவோர் மீது குறைந்தப்பட்சமாக சில ஆண்டுகள் சிறை தண்டனையும், குறிப்பிட்ட தொகை அபராதம் வசூலிப்பது, பல வகை ஒளி எழுப்பும் அல்லது திடுக்கிடச் செய்யும் உரத்த மற்றும் கிரீச் சத்தமிடும் ஹாரன்களை வாகனத்தில் பொருத்துவதோ உபயோகிப்பதோ கூடாது, அதிக ஓசை எழுப்பும் வாகனங்களை ஓட்டக் கூடாது, அச்சுறுத்தும் ஓசை எழுப்பும் மஃப்ளர் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு சட்ட விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
ஆனால், இவ்விதிமுறைகளை வாகன ஓட்டுநர்கள் பின்பற்றுகிறார்களா, அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் முழு நடவடிக்கை மேற்கொள்கிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக கூறமுடியும். அதிகாரம் படைத்தவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கால் சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறும் பலர் மீது நடவடிக்கை மேற்கொள்வதில்லை. சட்ட விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தபட்டால் ஒரு புறம் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குற்றங்கள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.
மேலும் வாகனத்தைச் சுற்றிலும் அலங்கார விளக்குகளை பொருத்தியுள்ளனர். எதிரில் வரும் வாகன ஓட்டநர்களின் கண்பார்வையை கருத்தில் கொள்ளாமல் ஹீரோயிசம் காண்பிக்க ஹெட்லைட்களை மாற்றியமைத்துள்ளனர்.  அதிக ஒளி திறனுள்ள லைட்டுகளை பார்க்கும்போது வாகன ஓட்டுநர்களுக்கு நான்கு விநாடிக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படும். இதனால், எதிரில் வரும் வாகனம் மீதோ, முன்னால் செல்லும் வாகனம் மீதோ, சாலையோரத்திலுள்ள பள்ளம், மின்கம்பம், மரங்களில் வாகனம் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. 
எனவே, சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதில், தேவையான நடவடிக்கைகளை காவல் மற்றும் போக்குவரத்து துறை கவனம் செலுத்த வேண்டும், தவிர விதிகளை மீறி ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் முறைப்படுத்த வேண்டும், சாலை விதிப்படி எங்கெங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டுமோ அதன்படி அமைக்க வேண்டும், தேவையில்லாத இடங்களில் வேகத்தடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும், எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விபத்துகளை குறைக்க வேண்டும்.
மத்திய அரசு இந்தியன் ரோடு காங்கிரஸ் என்ற அமைப்பு மூலம் நாடு முழுவதும் சாலை விதிமுறையை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. அந்த இந்தியன் ரோடு காங்கிரஸ் அமைப்பு வகுத்துள்ள வேகத்தடை பளிச்சென்று தெரியும்படி வர்ணம் பூசவேண்டும், இரவில் ஒளிரும்படி விளக்குகள் பொருத்த வேண்டும்,  வேகத்தடை இருப்பதை உணர்த்தும் வகையில் 40 மீட்டர் முன்பு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் நிறைவேறும். 


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது மட்டுமே விபத்துகளுக்கு காரணமில்லை. வாகனங்களில் (ஹாரன்) தொடர்ச்சியாகவும், நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவைவிட கூடுதலாக (டெசிபல்) ஒலி எழுப்புவது, விதிப்படி வேகத்தடை அமைக்காதது, முகப்பு விளக்குகளில் கருப்பு பட்டை மற்றும் புள்ளி ஒட்டாதது போன்றவையும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com