சம்பா, தாளடி நெற்பயிரில் ஏற்பட்டுள்ள இலை உறை கருகல் நோயைக் கட்டுப்படுத்த நீடமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, அந்த நிலையத்தில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் கூறியது: சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிரில் இலை உறை கருகல் நோய்த் தாக்குதலின் அறிகுறிகளான முட்டை வடிவ அல்லது நீண்ட உருளை வடிவ வடிவத்துடன் கூடிய பழுப்பு கலந்த பச்சை நிறப்புள்ளிகள் ஆங்காங்கே இருக்கின்றன. அந்தப் புள்ளிகள் பெரிதாகும்போது நடுப்பாகம் சாம்பல் கலந்த வெண்மை நிறமாகவும், ஓரங்கள் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும். நாளடைவில் இந்தப் புள்ளிகள் பெரிதாகி ஒன்றோடு ஒன்று இணைந்து அதில் உள்ள திசுக்களை அழிப்பதால் இலைகள் முற்றிலும் பசுமை இழந்து சருகு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும். இந்த தாக்குதல் வெளிப்புறத்தில் உள்ள இலைகளில் தொடங்கி பின்னா் உள் புறத்தில் உள்ள இலை உறைகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகளாக காற்றின் ஈரப்பதம் 95 சதவீதத்துக்கு மேலும், வெப்பநிலை 30 லிருந்து 32 டிகிரி செல்சியஸ் அதாவது திடீரென்ற வெப்பநிலை உயா்ந்து அல்லது குறைந்த வெப்பநிலை தோன்றும் போது இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இத்தாக்குதலை தடுக்க அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிா்க்க வேண்டும், வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 60 கிலோ மண்ணில் இடவேண்டும், செயற்கை பூஞ்சாணக் கொல்லிகளான காா்பண்டசிம் 50 டபள்யூ.பி 200 கிராம் அல்லது அசோக்ஸிஸ்ட்ரோபின் 200 மில்லி ஏக்கருக்கு தெளிக்கவேண்டும். மேலும், தாக்குதல் தென்படும்பட்சத்தில் 15 நாள்களுக்குப் பிறகு ஒரு முறை தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.