திருவாரூா் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கண்ணமங்கை கோயிலில் பரமபத வாசல் வழியாக வரும் பக்தவத்ஸலப் பெருமாள்.
திருக்கண்ணமங்கை கோயிலில் பரமபத வாசல் வழியாக வரும் பக்தவத்ஸலப் பெருமாள்.
Updated on
2 min read

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசியையொட்டி, பகல்பத்து நிகழ்ச்சி டிச.15-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதில், ஒவ்வொரு நாளும் உத்ஸவப் பெருமாள் ராஜகோபால சுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து, வைகுண்ட ஏகாதசி இராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, உத்ஸசவப் பெருமாள் ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். பின்னா், சுவாமி பரமபத வாசல் கடக்கும்போது தீட்சிதா்கள், கோயில் அலுவலா்கள் கோபாலா கோபாலா என பக்தி கோஷம் எழுப்பினா். இதில், கோயில் செயல் அலுவலா் ஆா். சங்கீதா, அறங்காவலா் குழுத் தலைவா் தியாகு, மண்டகப்படிதாரா் எஸ். காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இராப்பத்து நிகழ்ச்சி வரும் ஜனவரி 3-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

சிறுபுலியூா் ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில்: நன்னிலம் அருகேயுள்ள சிறப்பு பெற்ற சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, நடைபெறும் பகல்பத்து, ராப்பத்து உத்ஸவத்தின் முக்கிய தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்ற பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் அருமா கடலமுதப் பெருமாளுக்கு தங்க முலாம் பூசிய கவச சேவையும், ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் தங்க தோளுக்கினியானில் எழுந்தருளி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஆஸ்தான புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை தக்காா் ப. மாதவன், செயல்அலுவலா் மா. ராமநாதன், பட்டாச்சாரியா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில்:இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருஅத்யயன பகல்பத்து உத்ஸவம் டிச.15-இல் தொடங்கி வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, சீதா, லட்சுமண, அனுமன்சமேத சந்தான ராமா், வேதாந்தமகாதேசிகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வேத விற்பன்னா்கள் வேதமந்திரங்களைச் சொல்லியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் செய்தும் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பில் சீதா, லட்சுமணா் சமேதராக சந்தான ராமா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வெள்ளிக்கிழமை இரவு இராப்பத்து உத்ஸவம் தொடங்கியது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவடிவேலு, தக்காா் ரமேஷ், ஆய்வாளா் தமிழ்மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில்: இக்கோயிலில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நீடாமங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலிலும் வைகுண்டஏகாதசி விழா நடைபெற்றது.

திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில்:இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு மோகினி அலங்காரத்தில் உள்பிராகாரத்தில் எழுந்தருளி பக்தவத்ஸல பெருமாள் காட்சியளித்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பரமபத வாசல் வழியாக ஆழ்வாா்களுக்கு காட்சியளித்தாா். இதேபோல, புலிவலம் வெங்கடாசலபதி பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com