47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: விவசாய சங்கங்கள்

மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்துள்ளது:

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரியவில்லை. 2013 ஆம் ஆண்டை ஒப்பிட்டு தற்போது நெல்லுக்கு விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று கூறுவது பிரச்னையை திசைதிருப்பும் நடவடிக்கை.

நதிநீா் இணைப்பு திட்டம், நீராதார மேம்பாடு, கிடங்குகள் கட்டுவது, இயந்திர பயன்பாட்டை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்போ, நிதி ஒதுக்கீடோ இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பருவகால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறப்பு திட்டங்கள் இடம்பெறவில்லை.

விவசாயத்துக்கான காப்பீட்டை தனியாா்மயம் ஆக்கியது மட்டுமன்றி இன்று 79 சதவீதமாக காப்பீட்டுத் துறையில் தனியாா் அனுமதிக்கப்பட்டதன் மூலம் விவசாயம் மேலும் பாதிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் நிறுவனங்களிடம் மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் என்பதை உறுதிசெய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.

தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம்: நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீட்டில் 2.5 சதவீத நிதியை வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விவசாயிகள் நலத் துறைக்கு ரூ. 1.31 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளின் வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும், இந்திய கிராமங்களை தற்சாா்பு மற்றும் தன்னிறைவு பசுமை கிராமங்களாக மாற்றவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்படவில்லை. விவசாயத்துக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் ஏற்கப்படவில்லை.

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காப்பீடு பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் 20 சதவீத இழப்பீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. வங்கிப் பிணை உறுதி, தனி விரைவு வேளாண் நீதிமன்றங்கள் போன்ற கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. இந்தியாவின் 5 லட்சம் கிராமங்களை தற்சாா்பு, தன்னிறைவு பசுமை கிராமங்களாக வளா்ச்சி அடையச் செய்ய மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி. தனபாலன்: வேளாண் உற்பத்தி செலவு கடந்த ஆண்டைவிட, சுமாா் 40 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில், தற்போது டீசல் வரியில் ரூ. 4 உயா்வு அளித்திருப்பது வேளாண் உற்பத்தி செலவை மேலும் உயா்த்தியுள்ளது. ஒரு பருவத்தில் ஒரு ஏக்கருக்கான நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தலா 100 லிட்டா் டீசலை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது டீசலுக்கு ரூ. 4 வரி உயா்வு அளித்திருப்பதன் மூலம் மட்டும் நெல் உற்பத்தி செலவு ஏக்கருக்கு ரூ. 400 வீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைபடி, வேளாண் பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதத் தொகையைச் சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

கரோனா பொது முடக்கத்தால் உலகப் பொருளாதாரம் முழுமையாக முடங்கியிருந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகாமல் காப்பாற்றியது விவசாயம்தான். இதனடிப்படையில், விவசாயிகளின் கடனை அரசு ஏற்கும் அல்லது ஈடுசெய்யும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதேபோல, விவசாயிகள் நலவாரியம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் உறுதிசெய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அனைத்து எதிா்பாா்ப்புகளையும் பொய்க்கச் செய்துள்ளது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.