பருத்தி கொள்முதல்: ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை இரவு நேரங்களிலும் திறந்து வைக்கக் கோரிக்கை

திருவாரூரில் இரவு நேரங்களிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி கொள்முதல்: ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை இரவு நேரங்களிலும் திறந்து வைக்கக் கோரிக்கை

திருவாரூரில் இரவு நேரங்களிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் சுமார் 49 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். திருவாரூர் நன்னிலம் குடவாசல் மன்னார்குடி  ஆகிய வட்டங்களில் இந்த பருத்தி சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் பருத்தியில் முதல் சுற்று பஞ்சு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பருத்தி பஞ்சு ஏல முறையில் விற்பனை செய்ய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை அன்று இந்த பருத்தி ஏலம்  நடைபெறுகிறது. 

இதற்காக விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு தங்களது பருத்தி பஞ்சை எடுத்து வந்து அடுக்கி வைத்து ஏலம் விடுகின்றனர். குவிண்டால் ஒன்றுக்கு சுமார் ரூ. 12,000 வரை ஏலம் போவதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள மறைமுக ஏலத்துக்காக தங்களுடைய பருத்தியை திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சனிக்கிழமை இரவு முதலே விவசாயிகள் எடுத்து வர தொடங்கியுள்ளனர்.  ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மாலை நேரங்களில் பூட்டப்பட்டு விடுகிறது. பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படுவதால் விவசாயிகள் தாங்கள் எடுத்து வந்த பருத்திப்பஞ்சுடன் வாகனத்தில் சாலையிலேயே காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. 

அதன்படி சனிக்கிழமை இரவு தொடங்கி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரத் தொடங்கியதால் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விவசாயிகள் வாகனங்களிலேயும் சாலையிலும் அமர்ந்து காத்துக் கிடந்தனர். 

இது குறித்து பருத்தி விவசாயிகள் தெரிவிக்கையில், பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் தருவதாக இருந்தாலும் இதனை கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்து விற்பனை செய்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாக வேண்டி இருக்கிறது. ஆண்டுதோறும் இதே போல பருத்தியை விற்பனை செய்ய சாலைகளில் காத்துக் கிடந்து அல்லல் படுகிறோம். பருத்தி ஏலம் நடைபெறும் நேரங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு நேரங்களிலும் விவசாயிகள் எடுத்து வருகின்ற பருத்தியை அடுக்கி வைத்து பராமரித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com