கூத்தாநல்லூர்: பொதக்குடியில் மின்சார சந்தனக்கூடு ஊர்வலம்
By DIN | Published On : 12th December 2022 09:24 AM | Last Updated : 12th December 2022 09:24 AM | அ+அ அ- |

பொதக்குடியில் நடைபெற்ற மின்சார சந்தனக்கூடு ஊர்வலம்.
கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில், சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பூலாங்கொடி ஏற்றமும், பெரிய மினார் கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து, 12 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.15 மணிக்கு மின்சார சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.
தர்ஹாவில், மின்சார விளக்குகளால் சந்தனக் கூடு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மின்சார சந்தனக் கூட்டை, தர்ஹா முன்பு நிறுத்தப்பட்டு ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொரடாச்சேரி - லெட்சுமாங்குடி பிரதான சாலை மற்றும் பொதக்குடி முக்கிய வீதிகள் வழியாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
வழி நெடுகிலும் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர்கள் என ஏராளமானவர்கள் சந்தனத்தைப் பூசியும், பூக்களைத் தூவியும் வணங்கினர்.
சந்தனக் கூடு ஊர்வலத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணி சுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜலெட்சுமி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சந்தனக் கூடு ஏற்பாடுகளை, ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க நிர்வாகிகள், சந்தனக்கூடு உத்சவக்குழு, தர்ஹா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கவனித்தனர்.