கூத்தாநல்லூரில் துணைக் கருவூலம் அமைக்க வலியுறுத்தல்

கூத்தாநல்லூர் வட்டத்தில் துணைக் கருவூலம் இல்லாததால் பத்திரப் பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகின்றனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கூத்தாநல்லூர் வட்டத்தில் துணைக் கருவூலம் இல்லாததால் பத்திரப் பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகின்றனர். 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள 55 கிராம மக்களும், அரசுத் துறைச் சார்ந்த கருவூலப் பணிகளுக்காக தற்போது 50 கிலோ மீட்டருக்கும் மேலாகப் பயணம் செய்து, நீடாமங்கலத்திற்குச் சென்று வர வேண்டிய நிலை உள்ளதால், கூத்தாநல்லூரிலேயே துணைக் கருவூலம் அமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துகின்றனர். பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது தாலுக்காவாகவும் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
கூத்தாநல்லூரைப் பொறுத்தவரை வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், மெட்ரிக்., பள்ளிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பெரிய நகரங்களுக்கே அடையாளங்களான சூப்பர் மார்க்கெட் என அனைத்து வசதிகளையும் பெற்ற கூத்தாநல்லூர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. வரும் கல்வியாண்மல் அரசுக் கலைக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. 
பத்திரப்பதிவுகள் மற்றும் பட்டா மாறுதல்களை பொறுத்தமட்டில் மாவட்ட தலைநகருக்கு இணையாக பத்திரப் பதிவுகளும், பரிவர்த்தனைகளும் கூத்தாநல்லூரில் நடைபெற்று வருகிறது. மேலும், கூத்தாநல்லூரை பொருத்தமட்டில் ஒரு துணைக் கருவூலம் இல்லாதது அனைவருக்குமே பெரும் அலைச்சலையும், பண நஷ்டத்தையும்தான் ஏற்படுத்தியுள்ளது. கருவூலப் பணிகளுக்காக பொதுமக்களும், அரசு ஊழியர்களும் நீடாமங்கலம் செல்ல வேண்டிய நிலையே இன்னமும் தொடர்வது வருந்தத்தக்கதாக  உள்ளது. இது பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் மனச்சுமையை ஏற்படுத்தி வருகிறது. 
பத்திரப் பதிவு மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக 25 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் நீடாமங்கலம் கருவூலத்திற்குச் சென்று பணம் கட்டி வந்த பிறகே, தொடர்ந்து மற்ற பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளன. எனவே, கூத்தாநல்லூரில் ஒரு துணைக் கருவூலம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
மேலும், துணைக் கருவூலம் அமைப்பதற்கான இடத்தையும் சமூக ஆர்வலர்கள் தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரையும் செய்கின்றனர். 
தற்போது, ஆரம்ப சுகாதார நிலையம் கூத்தாநல்லூர் பெரியக் கடைத்தெருவில் உள்ள ரேடியோ பார்க் அருகே மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதனால், ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த இடம் தற்போது பாழடைந்த கட்டடமாக பராமரிப்பின்றி உள்ளது. எனவே, சார்பதிவாளர் அலுவலகம் அருகே, ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையம் இருந்த இடத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் கூத்தாநல்லூர் கருவூலத்திற்கான அலுவலகத்தை அமைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த கட்டடம் தற்போது, பாழடைந்து விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும், குடிமன்னர்களுக்கு பார் ஆகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, உடனே அந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு, அங்கு கருவூலம் இயங்குவதற்கான, புதிய அலுவலகம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் கருவூலப் பணிகளுக்காக நீடாமங்கலம் சென்று வர வேண்டிய இக்கட்டான நிலையைப் போக்கும் படியும் மாவட்ட ஆட்சியருக்கு, கூத்தாநல்லூர் வட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com