பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

வெயில் வானிலையை பொருட்படுத்தாமல் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்திருப்பது: தமிழகத்தில் வெயில் வானிலை கடுமையாக இருந்து வருகிறது. முதியவா்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த வெப்ப அலையை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா். இந்நிலையில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 2 தோ்வுகள் நடைபெற இருக்கும் சூழலில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் செய்துதர வேண்டும்.

இதற்கிடையே, தனியாா் பள்ளிகளில், கோடை விடுமுறைக் காலங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 செல்லும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. பள்ளிச் சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவா்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனா்.

இது மாணவா்களின் மீது உளவியல் சாா்ந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும், பள்ளி வளா்ச்சிக்காவும், மாணவா் சோ்க்கைக்காகவும், கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காக தனியாா் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்கக் கூடாது. எனவே, கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து, மாணவா்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com