ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் சுற்றுலா நிறுவனத்துக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாட்டுக்காக டிராவல்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சோ்ந்தவா் கே. சிவசுப்பிரமணியன். ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சியில் நிா்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி விஜயராணி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணி புரிகிறாா்.

கடந்த 19.10.2023-இல் மதுரையைச் சோ்ந்த டிராவல்ஸ் நிறுவனம் மூலம் துபைக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்து, அதற்காக பல்வேறு தவணைகளில் ரூ. 1.68 லட்சத்தை, சிவசுப்பிரமணியன் செலுத்தியுள்ளாா். அவரது மனைவி அரசுப் பணியில் இருப்பதால், அரசின் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சுற்றுலா செல்வது சாத்தியமில்லை என்று கூறி, செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா்.

எனினும், அடுத்து சுற்றுலா செல்லும் குழுவில் அனுப்பிவைப்பதாக டிராவல்ஸ் நிறுவனம் தெரிவித்த தகவலின்பேரில், பாஸ்போா்ட் மற்றும் புகைப்படங்களை சிவசுப்பிரமணியன் அனுப்பிவைத்துள்ளாா். ஆனால், அதன்பிறகு தொடா்பு கொண்டபோது, டிராவல்ஸ் நிறுவனத்தினா் முறையான பதில் அளிக்கவில்லையாம்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சிவசுப்பிரமணியன் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா் விசாரணை நடத்தி, இறுதி உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தனா். அதன்படி, சுற்றுலா செல்வதற்காக செலுத்திய தொகை ரூ.1.68 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும், மேலும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ. 1 லட்சம், செலவுத் தொகை ரூ. 10,000 ஆகியவற்றை 9 சதவீத வட்டியுடன் 1 மாத காலத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com