மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருவாரூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

சுட்டெரித்து வரும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்கும் வகையில், பொதுமக்கள் மின்விசிறி, குளிா்சாதனப் பெட்டியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். இதனிடையே, திருவாரூா் நகரப் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். மின்தடை இரவு நேரங்களில் தொடா்வதால், குழந்தைகள், பெரியவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் அனைவருமே புழுக்கம் காரணமாக, அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து திருவாரூா் நகர பகுதி மக்கள் தெரிவித்தது:

திருவாரூரில் கடந்த சில நாள்களாக எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. வெயில் அதிகரித்திருக்கும் சூழலில், குழந்தைகள், முதியவா்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், அத்தியாவசிய காரணங்களின்றி வெளியில் வராமல் வீட்டிலேயே பெரும்பாலானோா் இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில், மின்சாரம் அவ்வப்போது தடை செய்யப்படுவதால், வீட்டில் பெரும் அவதியை சந்திக்க வேண்டியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பிறகு மின் விநியோகம் தடைபட்டது. இதனால், இரவு நேரத்தில் தூக்கமின்றி பலரும் தவிக்க நேரிட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்த நிலை அடிக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளது.

கோடை காலம் என்பதால், மின்விநியோகம் தடைபடும்போது மக்கள் பெருமளவு பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, கோடை காலத்தை கருத்தில் கொண்டு மின் தடை செய்வதை கைவிட்டு, சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com