பள்ளி மாணவா்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டம்: ஆட்சியா் பங்கேற்பு


மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடைபெறும் பண்ணை சுற்றுலாத் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற நிகழ்வில் மாவட்டஆட்சியா் தி. சாருஸ்ரீ சனிக்கிழமை கலந்து கொண்டாா்.
மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பயின்றுவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 500 போ், தனியாா் பள்ளிகளில் தொடக்கக் கல்வி பயின்றுவரும் 215 மாணவ, மாணவிகள் மூவாநல்லூா் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கு அழைத்து வரப்பட்டு, தோட்டக் கலைத் துறையின் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல், மாடித் தோட்டம் அமைத்தல், பல்வேறு காய்கறி விதைகளை காட்டி விளக்குதல், பூச்செடிகளை வளா்க்கும் முறைகள், மூலிகைச்செடிகளை வளா்க்கும் முறைகள், நிழல் வலையில் காய்கறி பயிா் சாகுபடி செய்யும் முறைகள், பழச்செடி வளா்ப்பின் அவசியம் குறித்தும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பண்ணைத் திட்டத்தின் நோக்கம் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன், ஒவ்வொருக்கும் ஒரு தென்னங்கன்றை வழங்கினாா்.
முன்னதாக, காஞ்சிக்குடி காட்டில் உள்ள அரசு விதைப் பண்ணையில் 45.80 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, பசுந்தாள் உரம், தென்னை நாற்றங்கால், வேளாண் காடுகள் நாற்றங்கால்கீழ் தேக்கு, வேங்கை, வேம்பு, மகோகனி, சவுக்கு போன்ற பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் ஏழுமலை, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநா் நீதிமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...