செல்லூா் பள்ளிக்கு நாப்கின் இயந்திரங்கள்
திருவாரூா்: குடவாசல் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் நாப்கின் இயந்திரங்கள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
திருவாரூா் அருகே செல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் 125 மாணவியா் உள்பட 243 போ் கல்வி பயில்கின்றனா். மாணவிகளின் மாதவிடாய் காலத்தில் சுகாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரியூட்டி இயந்திரம் நிறுவ, நன்கொடையாளா்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதில் கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளி முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியா் சு. வெங்கட்ராமன், அவருடைய கோயம்புத்தூா் நண்பா்கள் இணைந்து சுமாா் ரூ. 20,000 மதிப்பில் நாப்கின் வழங்கும் இயந்திரம், நாப்கின் எரியூட்டி இயந்திரம் ஆகியவை வழங்கியுள்ளனா்.
இதையடுத்து, பள்ளியில் திங்கள்கிழமை அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், நன்கொடையாளா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சு. ராஜேந்திரன், ஆசிரியா்கள், மாணவா்கள், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் நன்றி தெரிவித்தனா்.