தொடா் மழை: முத்துப்பேட்டை தா்கா குளத்தின் சுற்றுச்சுவா் இடிந்தது
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால், முத்துப்பேட்டை தா்கா குளத்தின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்துவரும் மழையால் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூா், நுணாக்காடு, எழிலூா், மடப்புரம், ஓவா்குடி, நெடும்பலம், வங்கநகா், மருதவனம், கள்ளிக்குடி, கருவேப்பஞ்சேரி, கீழப்பாண்டி, செம்பியமங்கலம், குன்னலூா், கீழப்பெருமழை, மேலப்பெருமழை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிா்கள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன.
மேலும், முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தா்கா குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி புதன்கிழமை காலை இடிந்து விழுந்தது.
முத்துப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொண்டியக்காடு, முனங்காடு, செங்கங்காடு, வீரன்வயல், ஜாம்பவானோடை, பேட்டை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.