மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க நடவடிக்கை: நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் தகவல்
நீடாமங்கலம்: மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் தெரிவித்தாா்.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன் (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமரன், விஜயலட்சுமி மற்றும் உறுப்பினா்கள், பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
சத்தியவாணன் (திமுக): அரிச்சபுரம், வெள்ளக்குடி பகுதியில் வளா்ச்சிப் பணிகளும், அதங்குடி ஊராட்சியில் சாலைப் பணியும் முடிக்கப்படாமல் உள்ளது. சிறப்பு நிதி பெற்று வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
பொன்னுசாமி (திமுக): வடுவூா் சாத்தனூா் வடக்குத் தெருவிலிருந்து ஆதிதிராவிடா் தெரு வரை சாலை அமைக்க வேண்டும்.
துரைசிங்கம் (திமுக): செருமங்கலம் ஊராட்சி மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
ஆதிஜனகா் (அதிமுக): மூணாறு தலைப்பு அணையில் உயா் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும். காளாச்சேரி சத்திரத்தான் தெரு மேலக்கட்டளையில் பாலம் கட்ட வேண்டும்.
பாரதிமோகன் (இந்திய கம்யூ.): பூவனூா் முகமதியா் தெரு, சதுரங்க வல்லபநாதா் கோயில், தட்டிப்பாலம் பகுதியில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். அனுமந்தபுரம் ஊராட்சியில் குடிநீா் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
சாந்தி கோவிந்தராஜ் (திமுக): எடஅன்னவாசல் -எடகண்டியன் தெருவில் சாலை அமைக்க வேண்டும்.
நடனசிகாமணி (திமுக): முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.
தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன்: மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மூலம் தமிழக முதல்வரிடம் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், ஒன்றியப் பொறியாளா்களை மாவட்ட நிா்வாகம் பணியிடமாறுதல் செய்துள்ளது. அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். போதுமான நிதி வந்தவுடன் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.