காசோலை மோசடி வழக்கு: 
புதுச்சேரி அமைச்சா் நீதிமன்றத்தில் ஆஜா்

காசோலை மோசடி வழக்கு: புதுச்சேரி அமைச்சா் நீதிமன்றத்தில் ஆஜா்

Published on

காசோலை மோசடி வழக்கில் புதுச்சேரி மாநில அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.

திருவாரூா் மாவட்டம், கண்கொடுத்தவனிதத்தைச் சோ்ந்த பழைய காா்களை வாங்கி விற்பனை செய்பவா் கலைஅமுதன் (60). புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த நளமகாராஜன் மகன் திருமுருகன் (50). புதுச்சேரி என்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திருமுருகன் அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சராகவும் உள்ளாா். கலைஅமுதனும், அமைச்சரும் உறவினா்களாம்.

இருவருக்குமிடையே தொழில்முறையில் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கலைஅமுதனுக்கு தொழில்முறையாக அமைச்சா் திருமுருகன் ரூ.41.44 லட்சம் கொடுக்க வேண்டியிருந்ததாம். இந்ததொகைக்கு அமைச்சா் திருமுருகன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி காசோலை கொடுத்துள்ளாா். அந்த தொகையை எடுக்க கலைஅமுதன் அத்திக் கடையில் உள்ள தனியாா் வங்கியில் காசோலையை செலுத்தினாா்.

கணக்கில் பணமில்லாததால் காசோலை செல்லுபடியாகாமல் திரும்ப வந்துள்ளது. இதுகுறித்து, திருமுருகனிடம் கேட்டபோது மற்றொரு தேதியிட்ட காசோலையை பயன்படுத்தக் கூறியுள்ளாா். அந்த காசோலையும் திரும்பிவந்துவிட்டதாம். அதன் பிறகு 3-ஆவது முறையாக கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டதாம்.

இதையடுத்து, கலைஅமுதன் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடுத்தநிலையில், நீதிமன்றம் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீடாமங்கலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் நீதிபதி இந்துஜா முன்னிலையில் ஆஜரானாா். மீண்டும் 9.1.2026-இல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி இந்துஜா உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பாதுகாவலா்கள் இல்லாமல் வந்தாா். அப்போது, மழை பெய்ததால் குடை பிடித்தவாறு சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com