நீடாமங்கலம் மேம்பாலப் பணிகளை ரயில்வேதுறை விரைந்து தொடங்க வலியுறுத்தல்
நீடாமங்கலம் மேம்பால கட்டுமானப் பணிகளை ரயில்வேதுறைவிரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் ரயில்வே கேட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் கேட் மூடப்படும் வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாள்தோறும் பல மணி நேரம் கேட் மூடப்படுவதால், பொதுமக்கள், நீடாமங்கலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.
நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கடந்த 35 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் பலமுறை நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி வந்தாா்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, பால கட்டுமானப் பணிக்காக ரூ.170 கோடிக்கு நிா்வாக அனுமதி கடந்த 5.6.2023 -இல் சி.ஆா்.ஜ.எப். சேதுபந்தன் திட்டத்தின்கீழ் பெறப்பட்டது.
மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட பணியாக 2 ரயில்வே பாலம் அதன் இணைப்பு பாலம் என மொத்தம் 327 மீ.
நீளமுள்ள பாலப்பணி மற்றும் 2 சுரங்க பாலப் பணிகள் உள்பட மீதமுள்ள பணிகள் சுமாா் 90 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது என அமைச்சா் ஏ.வ. வேலு தெரிவித்தாா்.
தொடா்ந்து, மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். தற்போது மேம்பாலப் பணிகள் பெருமளவில் நிறைவடைந்துள்ளன.
அதேசமயம் மத்திய அரசின் ரயில்வே பணிகள் தொடங்காமல் உள்ளன. பால பணிகளை முழுமை பெறும் வகையில், அப்பணிளையும் விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

