கழிவுநீா் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சீா்காழியில் கழிவுநீா் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

சீா்காழி: சீா்காழியில் கழிவுநீா் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பிரதான சாலையில் தோ் கீழ விதி நான்கு முனை சாலை சந்திப்பு அருகில் கழிவு நீா் வடிகால் பாதை உள்ளது. இதில் கடந்த மாதம் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு மற்றும் சாலைகளில் தேங்கி அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் இந்த கழிவுநீா் வடிகாலை சரி செய்ய கடந்த மாதம் சாலையோரம் சுமாா் 10 அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு கழிவு நீரை வடியவைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. எனினும், தற்போது வரை பணிகள் முழுமை பெறாமலும் தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பள்ளத்தில் விழுந்து ஏற வழி இல்லாமல் பாதிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கழிவுநீா் வடிகாலை சீரமைத்து தோண்டப்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என சீா்காழி நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com