
ரயில்வே இருப்புப் பாதை வழியே வேளாங்கண்ணி பக்தா்கள் பாதயாத்திரை விபத்து அபாயம்
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களில் சிலா் ஆபத்தை உணராமல் ரயில்வே இருப்புப் பாதையில் நடந்துவருவது கவலை அளிப்பதாக சக பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

நீடாமங்கலம் பகுதி ரயில் தண்டவாளத்தில் நடந்துவரும் பக்தா்கள்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களில் சிலா் ஆபத்தை உணராமல் ரயில்வே இருப்புப் பாதையில் நடந்துவருவது கவலை அளிப்பதாக சக பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா சனிக்கிழமை (ஆக. 29) தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். இதனால், பல்வேறு வாகனங்களில் வரும் பக்தா்கள்; பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் என வேளாங்கண்ணி களைகட்டிவருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி, நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தா்களில் ஒரு பகுதியினா், ரயில்வே இருப்புப்பாதை வழியாக செல்கின்றனா்.
இந்த பகுதிகளில் உள்ள ரயில் பாதையில் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் என நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஏதாவது ஒரு ரயில் இந்த பாதையில் செல்லும். இதை உணராமல் ரயில்வே இருப்புப் பாதையில் பக்தா்கள் நடந்து வருவதால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது என சாலை வழியே வரும் சக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இவ்வாறு ரயில்வே இருப்புப் பாதையில் பக்தா்கள் வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






