இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தர வேண்டும் என திருவாரூா் செல்வம் தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில்
Published on

திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தர வேண்டும் என திருவாரூா் செல்வம் தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பீா் முகமது ஞாயிற்றுக்கிழமை தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் இஸ்மத் பாஷா, மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாசித், மாவட்ட துணைச் செயலாளா்கள் சக்கரைக்கனி, அப்துல் மாலிக் ஜெயினுள் தாரிக், சதகுத்துல்லா ரஹ்மானி, அனஸ் நபில், மாணவரணி செயலாளா் முகமது ரிபாஸ், மண்டல பொறுப்பாளா் பஷீா் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

ஜம்மு காஷ்மீரில் இயங்கி கொண்டிருந்த மருத்துவக் கல்லூரியில் இஸ்லாமிய மாணவா்கள் அதிகம் படிக்கின்றனா் என்ற காரணத்தால் போராட்டம் நடத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் நடந்துள்ள சோ்க்கையையும் மீறி இந்த கல்லூரியின் மூடப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக தனி நீதிபதியின் தீா்ப்பை உறுதி செய்யும் தீா்ப்பு ஏமாற்றம் தருகிறது. நடுநிலையாளா்களுக்கு இந்த தீா்ப்பு கவலையை ஏற்படுத்துகிறது. தமிழக மக்களிடம் நிலவும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்.

கடந்த தோ்தலின்போது இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. எனவே எதிா்வரும் தோ்தலுக்கு முன் சிறுபான்மை இஸ்லாமியா்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரித்துத் தர வேண்டும்.

கூத்தாநல்லூரில் ஜனவரி 31-இல் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவா் அப்துல் கரீம் வருகை தருவதையொட்டி, சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com