நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பக்தி இசை அவசியத் தேவை: பக்திப் பாடகர் வீரமணி ராஜு

 இந்த உலகில் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை! அதுவும், பக்தி இசை என்றால் மனம் மட்டுமா மயங்கும், உயிரும் அல்லவா கசிந்துருகும்!  இறைப் பாடல்களை மெல்லிசையோடு கேட்கும்போது காதில் தேன் மட்டுமல்ல, அமிர்தமே ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:49 pm

வே.சுந்தரேஸ்வரன்

 இந்த உலகில் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை! அதுவும், பக்தி இசை என்றால் மனம் மட்டுமா மயங்கும், உயிரும் அல்லவா கசிந்துருகும்!

 இறைப் பாடல்களை மெல்லிசையோடு கேட்கும்போது காதில் தேன் மட்டுமல்ல, அமிர்தமே பாய்ந்தோடும் உணர்வைப் பெறுவது ஆன்மிகத்தில் திளைத்தவர்கள் மட்டுமே உணர்ந்த சுகானுபவம்.

 தெய்வீக உணர்வுடன் பாடகர் கானமழை பொழியும்போது அதைக் கேட்போரின் உள்ளம் பரவச நிலை அடைகிறது என்று சொன்னால் அது நிதர்சனம். அத்தகைய உணர்வைப் பெறச் செய்தார் அண்மையில் தில்லி வந்த பக்திப் பாடகர் வீரமணி ராஜு.

 பணத்திற்காகப் பாடுவோர் ஒரு ரகம் என்றால், பக்தியில் திளைக்கும் வாய்ப்பாகக் கருதி பாடுவோர் சில ரகம். அந்த ரகத்தைச் சேர்ந்தவன் தான் என்று சொல்லாமல் உணர்த்தியது வீரமணி ராஜுவின் பக்தி இசைமழை.

 தில்லியின் கார்த்திகை மாதக் குளிரிலும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பக்திப் பாமாலையைப் மனம் உருகிப்பாடி ஐயப்பப் பக்தர்களின் மனங்களைப் பக்திமழையால் நனைத்தார் இவர்.

 மயூர் விஹார் ஃபேஸ் 2-ல் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதியினர் நடத்திய பக்தி இசைக் கச்சேரியில் பங்கேற்ற அவரிடம் பேசினோம்:

 ""சென்னைதான் நான் பிறந்த ஊர். அப்பா சோமு, கவிஞர். இன்றைக்கும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் அவர்தான். அப்பாடல் பிரபலமடையக் காரணமாக இருந்தவர் மறைந்த எனது சித்தப்பாவும் பாடகருமான கே. வீரமணி.

 எனக்கு 7 வயது இருக்கும் போதே சித்தப்பா வீரமணியின் பக்தி இசைக் கச்சேரிகளுக்குத் செல்ல ஆரம்பித்தேன். எனது 14 வயதில் சென்னை மயிலாப்பூர் லஸ் முனையில் உள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் மேடை அரங்கேற்றம் நடைபெற்றது.

 கச்சேரிகளுக்கு அதிமாகச் செல்ல வேண்டியிருந்ததால் மதுரைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம். பயின்றேன். ஓய்வு நேரத்தில் பொழுதை வீணாக்காமல் தட்டச்சு, சுருக்கெழுத்தில் உயர்நிலை முடித்தேன்.

 அப்போது எனக்கு வாழ்க்கையில் ஒரு திருப்பம். அது, தமிழக முதல்வராக இருந்த மறைந்த எம்.ஜி.ஆரால் வந்தது.

 ஆம், 1981-ம் ஆண்டு. வீரமணி சித்தாப்பாவுடன் எத்திராஜ் மண்டபத்தில் நடைபெற்ற கல்யாணக் கச்சேரியில் "மருதமலை மாமணியே முருகையா...' பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நான் பாடுவதைக் கவனித்தார்.

 பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னை அழைத்து ரூ. 1000 கொடுத்துப் பாராட்டினார். நான் திகைத்து நின்றேன். அக்காலத்தில் அது பெரிய தொகை. எனது சித்தப்பாவிடம் என்னைப் பற்றி விசாரித்தார்.

 நான் அப்போது போலீஸ் துறையில் உளவுப் பிரிவில் சுருக்கெழுத்தர் நிருபர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். அது பற்றி எனது சித்தப்பா அவரிடம் கூறினார். பிறகு சில நாள்களில் எனக்கு நேர்காணல் அழைப்பு வந்து, அப்பணியிடம் கிடைத்தது. அதன் பிறகு பதவி உயர்வு பெற்று ஏ.டி.எஸ்.பி. வரை வந்துவிட்டேன். அரசுப் பணியாற்றினாலும் கூட பக்தி இசையில் எனது மனம் ஈடுபட்டு வந்தது. இதில், முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதால் 6 மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன்.

 இதுவரை 5 ஆயிரம் கச்சேரிகளில் பாடியுள்ளேன். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கச்சேரிக்காகச் சென்றுள்ளேன். சினிமாப் பாடல்களைப் பாடுவதை விட பக்திப் பாடல்களைப் பாடுவதில் மனத்துக்குத் திருப்தி கிடைக்கிறது. பழைய பாடல்கள் போன்று புதிய பாடல்கள் இல்லை. சினிமாவில் பாடுவதால் கிடைக்கும் பணம், புகழ், பெயர் அத்தனையும் பக்திப் பாடல் பாடுவதால்

 கிடைக்கிறது. தவிர, பெரிய ஆத்ம திருப்தியும் இதில்தான் கிடைப்பதாக உணர்கிறேன். எனது பாடல்களைக் கேட்கும்போது மற்றவர்கள் பெரும் மன நிம்மதியைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்வாக இருக்கிறது. பகவானின் நாமத்தைப் பாடுவதால் எனக்கு வேண்டுவது கிடைக்கிறது. இது நான் கண்ட அனுபவம்.

 இன்றைய தலைமுறையினருக்குப் பக்தி இசை அவசியத் தேவையாக உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும் காலச்சூழலில் இன்றைய இளைய சமுதாயத்தினர் வாழ்க்கின்றனர். அதற்கான சூழலும் அதிகம் உள்ளன. பக்தி சார்ந்த இசையைக் கேட்பதால் மனம் அமைதி அடைவதால் மன அழுத்தம் குறைகிறது.

 ஆண்டுக்கு 250 கச்சேரிகளில் பாடுகிறேன். கார்த்திகை தொடங்கி மூன்று மாதங்களில் மட்டும் 110 கச்சேரிகளில் பாடுகிறேன். நான் பல கடவுளின் பாடல்களைப் பாடினாலும் "ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி ராஜு' என்று பக்தர்கள் என்னைக் கூறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்த சமூக அந்தஸ்துக்குக்கூட ஸ்ரீ ஐயப்பன் அருள்தான் காரணம்.

 எனக்குக் கிடைத்த இரு மறக்க முடியாத அனுபவங்கள் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனது 10 வயதிலேயே ஆசி பெற்றது.

 மற்றொன்று, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் ஏற்பட்ட சந்திப்பு. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விடைபெறுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது.

 இசைக் கச்சேரிக்காகத் தில்லி சென்றிருந்த சமயம் அது. திருக்குறளைப் பாடல்களாக நான் பாடிய குறுந்தகட்டை (சி.டி.) கலாமிடம் அளிக்க விரும்பினேன். அதற்காக அவரைச் சந்திக்க முயன்றேன். அவர் உடனடியாக சந்திப்பாரா என்ற ஐயம் இருந்தது. இதனால், தில்லியில் இருந்து ஹரித்துவார் சென்றுவிட்டேன்.

 ஆனால், அன்றைக்கு மாலையிலேயே கலாம் அலுவலகத்தில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் சந்திப்பதற்கு அவர் அனுமதி தந்துவிட்டதாக தெரிவித்தனர். நான் ஹரித்துவாரில் இருப்பதாக கூறினேன். சிறிது நேரத்தில் மீண்டும் தொலைபேசி அழைப்பு. கலாம் மறுநாள் பார்க்க இசைந்துவிட்டதாகக் கூறினார். அவசரமாக விமானம் பிடித்து தில்லி வந்தேன். கலாமைச் சிறிதுநேரம் மட்டுமே பார்க்க அனுமதி தந்தனர்.

 அவர் இருந்த அறையின் உள்ளே நுழைந்தபோது இருக்கையில் இருந்த கலாம் எழுந்து இருகரம் கூப்பி வரவேற்றார். எனக்கு ஆச்சரியம். அவரே சொன்னார்.

 ""எல்லோரும் என்னைப் பார்க்க கோட்டு, சூட்டுடன்தான் வருவார்கள். ஆனால், நீங்களோ நெற்றியில் விபூதி பூசி, வேஷ்டியுடன் வந்திருக்கிறீர்கள். அதனால் எழுந்து வரவேற்றேன்'' என்றார். நான் சிறிது நேரம் ஆச்சரியத்தில் சமைந்துபோனேன்.

 பின்னர், நான் பாடிய 1,330 திருக்குறள் அடங்கிய பாடல் சி.டி.யை அவரிடம் அளித்தேன். அதில் "துறவு' தலைப்பிலான திருக்குறளைப் பாடுமாறு கூறினார். பிறகு, தேவாரம்,

 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஆகிய பாடல்களையும் பாடுமாறு கூறி மிகவும் ரசித்துக் கேட்டார். பாரதியாரின் "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்' என்ற பாடலையும், "சிந்துநதியின் மிசை நிலவிலே....' பாடலையும் பாடினேன். அவர் அகம் மகிழ்ந்து அங்கிருந்த புகைப்படக்காரரை அழைத்து தன்னுடன் நின்று புகைப்படம் எடுக்குமாறு கூறினார்.

 அதன்பிறகு தன்னுடைய மேஜையில் இருந்த திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக எனக்கு அளித்து மகிழ்ந்தார். என்னுடைய "விசிட்டிங் கார்டை' பெற்றுக் கொண்டார். அப்போது, திருக்குறள் பாடலைக் கேட்டுவிட்டு கருத்து தெரிவிப்பதாகக் கூறினார். அதன் பின்னர், குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தார்.

 இந்நிலையில், ஒருநாள் காலை எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் கலாம் பேசினார். எனக்கோ மீண்டும் ஆச்சரியம். கலாம் நம்முடன் பேசுவாரா? மீண்டும் அவரிடமே கேட்டேன் "யார் பேசுவது?' என்று. "நான்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் பேசுகிறேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் என் இல்லத்திற்கு வர முடியுமா?' என்றார். எனக்கு மெய் சிலிர்த்தது.

 மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க அவரது இல்லம் சென்றேன். திருக்குறள் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூறிப் பாராட்டிய அவர், அதில் உள்ள காமத்துப்பால், பொருட்பால் பற்றியெல்லாம் கருத்துத் தெரிவித்தார். பின்னர், ரூ. 500 கொடுத்து சி.டி.யை வாங்கிக் கொண்டார். நான் வேண்டாம் என்றேன். "திருக்குறளுக்கு ஓர் உயர்வு உண்டு. அதை எனக்கு மட்டுமல்ல யாருக்கும் அப்படி இலவசமாகத் தராதீர்கள்' என்றார் அவர்.

 சரி! இதெல்லாம் யாரால் கிடைத்தது. யோசித்துப் பாருங்கள்... நிச்சயம், ஸ்ரீ ஐயப்பனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?'' என்கிறார் வீரமணி ராஜு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.