/

வெளி மாநிலங்களில் பணியாற்றும் தமிழக சுற்றுலா ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் திடீர் நிறுத்தம்

புது தில்லி, அக். 12:    மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட வெளி மாநில நகரங்களில் பணியாற்றும் தமிழக சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கான 20% சிறப்பு ஊதியம் இரு மாதங்களாக வழங்கப்படவில்லை புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, அக். 12:    மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட வெளி மாநில நகரங்களில் பணியாற்றும் தமிழக சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கான 20% சிறப்பு ஊதியம் இரு மாதங்களாக வழங்கப்படவில்லை புகார் எழுந்துள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவோர் வசதிக்காக தில்லி, மும்பை, ஆக்ரா, ஜெய்ப்பூர், கோவா, ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தமிழக சுற்றுலாத் துறையின் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களாக சிறப்பு ஊதியம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து சுற்றுலாத் துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது:

"25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு எங்களுக்கு சிறப்பு ஊதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை ஆனால், தில்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பணியாற்றும் தமிழ்நாடு இல்லம், பொதுப்பணித் துறை, கருவூலத் துறை உள்ளிட்ட தமிழக அரசின் பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏனென்று கேட்டால் "மற்ற துறைகளின் பணித் தன்மை வேறு, சுற்றுலாத் துறையின் பணித் தன்மை வேறு' என்று காரணம் கூறுகின்றனர். இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். சுற்றுலாத் துறை அமைச்சரிடம் மனு அளிக்க இருக்கிறோம்' என்று அந்த ஊழியர் கூறினார்.

சுற்றுலாத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதியம் வழங்கப்படாததால், பல ஊழியர்கள் தங்கள் குடும்பச் செலவை ஈடுசெய்ய முடியாமல் சொந்த ஊருக்கே மாற்றலாவது குறித்து யோசித்து வருவதாக சுற்றுலா அலுவலர் ஒருவர் கூறினார்.

திடீரென சிறப்பு ஊதியம் நிறுத்தப்பட்டதால், பெருநகர வாழ்க்கைக்கான செலவை ஈடுகட்ட முடியாமல் கஷ்டப்படுவதாக பல ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.

தமிழக சுற்றுலாத் துறையின் வெளிமாநில அலுவலகங்களில், அந்த மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் சுற்றுலாத் துறை பஸ்களில் பயணம் செய்வதற்கும், தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்குவதற்கும் முன்பதிவு செய்யப்படுகிறது.

அதற்காக, அந்த அலுவலகங்களில் சுற்றுலா அலுவலர்கள், உதவி சுற்றுலா அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 தில்லி, மும்பை, கோல்கத்தா போன்ற இடங்களில் மட்டும் ஆண்டுக்கு தலா சுமார் ரூ. 1 கோடிக்கு முன்பதிவு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.  

வெளிமாநிலங்களின் சில முக்கிய நகரங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.