/

வாடகைக்குத் தயார்...: போவோமா சைக்கிள் சவாரி?

புது தில்லி, செப். 13: நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கத்தால் மாறுபட்ட சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த உலகில், இயற்கை சார்ந்த வாழ்வியலில் இருந்து செயற்கையை நோக்கிப் பயணிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, செப். 13: நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கத்தால் மாறுபட்ட சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த உலகில், இயற்கை சார்ந்த வாழ்வியலில் இருந்து செயற்கையை நோக்கிப் பயணிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மானுட சமூகம்.

 "காலத்திற்கேற்ப மாறத்தான் வேண்டும்' என்று ஒற்றை வரியில் தங்களுக்குள் சமாதானம் கூறிக்கொள்ளும் போக்கும் ஏற்பட்டுள்ளது.

 உடல், மனம் வளர்ச்சிக்கான விஷயங்களைவிட அவற்றைப் பாழ்படுத்தும் காரணிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்தும் வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது மனித சமுதாயம்.

 குறிப்பாக, வாகனப் புகை சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் தீங்கை ஏற்படுத்தி வருகிறது. அவரவர் வசதிக்கேற்ப வாகன வசதி என்ற நிலைமை போய் வாகனம் வைத்திருப்பதே கௌரவத்தின் குறியீடு என்று பலரும் நினைக்கத் தொடங்கிவிட்டதன் விளைவு, வாகனப் பெருக்கம் அதிகரிக்க காரணமாகிவிடது.

 கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை வீடுதோறும் சைக்கிள் வைத்திருப்பது ஒரு சொத்தாகவும், கௌரவமாகவும் கருதப்பட்டது.

 சைக்கிளை தனது உடைமையாகக் கருதாமல் உயிராக நேசித்தவர்கள்கூட உண்டு. சுற்றுச்சூழல், ஆரோக்கியம் ஆகியவற்றின் நண்பன் சைக்கிள் என்பதை உணர்வோர் வெகு சிலரே.

 வெளிநாடுகளில் அதுபோன்ற நிலை இல்லை. லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ரயில் நிலையங்களில் சைக்கிள்கள் நிறுத்துமிடங்கள் அமைத்து மக்களின் சவாரிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

 சீனா, ஜப்பான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளிலும் அதிகமானோர் சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர்.

 இந்தியாவில் கிராமங்களிலும், நகரங்களிலும் தொழிலாளர்கள், கூலி வேலை செய்வோர், நடுத்தர மக்கள்தான் சைக்கிளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஏழைத் தொழிலாளர்களின் நண்பனாக சைக்கிள் விளங்குகிறது.

 வாரத்தில் 5 நாள்களாவது தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியோ, சைக்கிளோ ஓட்டுவது நலம் என்று உலக சுகாதார அமைப்பு கூறினாலும், அது பற்றிய விழிப்புணர்வு எத்தனை பேருக்கு இருக்கும்?

 நாட்டின் தலைநகரான தில்லியிலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தில்லியில் வாகனப் பெருக்கம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. மோட்டார் சைக்கிளோ, காரோ இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவுக்கு வாகனப் பெருக்கம் காணப்படுகிறது. சைக்கிள் ஓட்டுபவரை விரல் விட்டு எண்ணிவிடலாம். சைக்கிள்களை வாடகைக்கு விட்டு சேவை அளிப்பதில் ஒரு சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

 அதிலும், தில்லி மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் சேவையில் சில நிறுவனங்கள் ஈடுபடுவது என்பது பாராட்டுக்குரிய விஷயம் தானே?

 தில்லி மண்டி ஹவுஸ், மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியேறும் எதிர் பகுதியில் 10 சைக்கிள்கள் பூட்டப்பட்டு ஒரு கூரையின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளன.

 அதன் அருகே சென்றால், "சைக்கிள் வேண்டுமா?' என்று வாஞ்சையுடன் கேட்கிறார் அங்கிருக்கும் பணியாளர்.

 குறைந்தபட்ச வாடகை 10 ரூபாய் கொடுத்தால் 4 மணி நேரம் ஹாயாக ஊர் சுற்றவோ, சொந்த அலுவல்களுக்காக தேவையான இடங்களுக்குச் சென்றுவரவோ சைக்கிளை வாடகைக்குத் தருகின்றனர்.

 அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.5 கொடுக்க வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த சேவை தங்கு தடையின்றி தொடர்கிறது. இரவுக்குப் பிறகு ஒரு மணிநேரத்திற்கு ரூ.100 அளித்தால் சைக்கிள் தருகின்றனர்.

 ""தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சைக்கிள் வாடகைக்குத் தரப்படும். உள்ளூர் முகவரியுடன் கூடிய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை தந்தால் மட்டுமே சைக்கிள் தருகிறோம். அல்லது சைக்கிளின் மதிப்பிற்குரிய பணத்தைத் தர வேண்டும். சைக்கிளை திரும்பி வந்து ஒப்படைக்கும்போது அவர்கள் அளித்த ஆவணம் திருப்பித் தரப்படும். இந்த சேவையை நாங்கள் அளித்து வருவது மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஓரளவுக்குத் தெரியும்'' என்று சைக்கிள் பாதுகாவலர் தினேஷ் மிஸ்ரா கூறினார்.

 இந்த வாடகை சைக்கிள் சேவையில் ஈடுபட்டுவரும் தில்லியைச் சேர்ந்த பிளானெட் அட்வர்டைசிங் நிறுவனப் பிரதிநிதி நாராயணிடம் தொடர்பு கொண்டோம்.

 ""தில்லியில் 2008-ம் ஆண்டில் இருந்து இந்தச் சேவையை அளித்து வருகிறோம். நகரின் சுற்றுச்சூழலைப் பேணுவதற்கு சைக்கிள் போன்றதொரு நல்ல வாகனம் ஏதுமில்லை. மேலை நாடுகளில் சைக்கிள் ஓட்டுவதற்கே பிரத்யேக நடைபாதைகளை அமைத்துள்ளனர்.

 தில்லியிலும் ஒரு சில இடங்களில் அதுபோன்று உள்ளது. சைக்கிள் ஓட்டுவதால் மனதிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. பணச் செலவு குறைகிறது. கவலையைப் போக்குகிறது. உடல் பலமடைகிறது. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை.

 நாங்கள் லாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இச் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறோம்.

 தில்லியில் மண்டி ஹவுஸ், பாராகம்பா ரோடு, படேல் சௌக், ஆர்.கே. ஆஸ்ரம் மார்க், அக்ஷர்தாம், பிரகதி மைதான், இந்தர்பிரஸ்தா, மயூர்விஹார் ஃபேஸ் 1, மயூர்விஹார் விரிவாக்கம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை சைக்கிள் சேவையை அளித்து வருகிறோம். எங்கள் வசம் 150-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் உள்ளன.

 மெட்ரோ ரயில்களில் வரும் பலர் இச்சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 குர்காவ்ன் உள்ளிட்ட சில இடங்களிலும் இச்சேவையைத் தொடங்குவதற்கு நிறுவனத்தின் உரிமையாளர் சுதிர் கரியால் நடவடிக்கை எடுத்து வருகிறார்'' என்றார். இந்நிறுவனம் தவிர வேறு சில நிறுவனங்களும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுபோன்ற வாடகை சைக்கிள் சேவையை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

 சைக்கிளின் அறிமுகம் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாக இருந்தாலும் அந்த "இரு கால் நண்பன்' மனிதர்களின் பல்வேறு பணிகளுக்கும் உதவி வருகிறது.

 உடல் நலத்தை தொலைக்கும் விஷயங்களில் அதிக நாட்டம் கொள்ளும் மனிதர்கள், உடல் நலத்துக்கு உதவிடும் சைக்கிள் நண்பனுடன் தினமும் சிறிது நேரமாவது ஏன் சவாரி செய்யக் கூடாது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.