நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓய்ந்தது பிரசாரம்: மாநகராட்சி யார் வசம்?

கிராமமாக இருந்தாலும், மாநகராக இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் இடையே உற்சாகமும், பரபரப்பும் வந்துவிடுவது வழக்கம். அதுவும் வாக்குப்பதிவு நாள் நெருங்க, நெருங்க, அனல் பற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:37 pm

வே.சுந்தரேஸ்வரன்

கிராமமாக இருந்தாலும், மாநகராக இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் இடையே உற்சாகமும், பரபரப்பும் வந்துவிடுவது வழக்கம்.

அதுவும் வாக்குப்பதிவு நாள் நெருங்க, நெருங்க, அனல் பறக்கும் பிரசாரமும் களைகட்டத் தொடங்கிவிடுவதுண்டு. நாட்டின் தலைநகரான தில்லியின் மாநகராட்சித் தேர்தல் என்றால் கேட்கவா வேண்டும்!

பிரசாரத்துக்கான கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் விறுவிறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்களின் ஆளுயர பேனர்கள், சுவரொட்டிகள், கட்-அவுட்டுகள் ஆகியவை பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்தன.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் நடைபெற்றது. அதற்கு ஒத்துழைப்பது போல் வானிலையும் இதமாக இருந்தது.

2,500 வேட்பாளர்கள்

மாநகராட்சியின் 272 வார்டுகளின் கவுன்சிலர்களுக்கான இத்தேர்தலில் 2,535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 1 கோடியே 27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

தில்லி முழுவதும் 2,647 இடங்களில் 11,572 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ், பா.ஜ.க.

பரஸ்பரம் புகார்

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தில்லியை ஆளும் காங்கிரஸ் அரசும், மாநகராட்சியை ஆளும் பாஜகவும் பரஸ்பரம் புகார் கூறத் தொடங்கிவிட்டன.

"சுற்றுப்புறத் தூய்மை, அங்கீகாரமற்ற குடியிருப்புகளை முறைப்படுத்துவது, வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாஜக கவனம் செலுத்தவில்லை' என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "குடிநீர் விநியோகத்தில் தடங்கல், யமுனை நதிச் சீர்கேடு, பெட்ரோல், டீசல், கேஸ், சி.என்.ஜி., பால் ஆகியவற்றின் விலை உயர்வு, அதிகரித்துவரும் குற்றங்கள், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவதில் மெத்தனப் போக்கு, குடிசைப் பகுதி மக்களுக்கு குறைந்த விலை வீடுகளை கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது' உள்ளிட்டவை தொடர்பாக தில்லி காங்கிரஸ் அரசின் மீது புகார் கூறி பாஜகவினர் பிரசாரம் செய்தனர்.

தேர்தல் அறிக்கை

பா.ஜ.க. வெளியிட்டுள்ள "விஷன் தில்லி -2025' எனும் தலைப்பிலான 15 பக்கத் தேர்தல் அறிக்கையில், "எங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தில்லி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த அனைத்து அடிப்படை வசதிகளும், "பிராட்பேண்ட்' இணையம், மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை, குடிசையில்லா நகரம், பசுமை சூழல், தரமான கல்வி ஆகியவை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், மாநகராட்சியை மூன்றாகப் பிரிக்கும் நடவடிக்கையில் தங்கள் கட்சியின் பங்கை எடுத்துக் கூறியுள்ளது.

மேலும், "அங்கீகாரமற்ற காலனிகளை விரைந்து முறைப்படுத்தும் நடவடிக்கைகள், கட்டட இடிபாடுகள் நிகழாமல் தடுக்கும் வகையில் புதிய திட்டம், குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உடை, பாடநூல்கள்' போன்ற பல அக்கட்சி அளித்துள்ளது.

கட்சித் தொண்டர் கொலை:

நகரில் அண்மையில் பாஜக கட்சித் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக அக்கட்சியின் தற்போதைய கவுன்சிலரும், இந்தத் தேர்தல் வேட்பாளருமான மாதவ் பிரசாத் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு, சிவசேனைக் கட்சியின் வேட்பாளர் சுனில் குமார், ரோஹிணி பகுதியில் 4 பேர் கும்பலால் தாக்கப்பட்டார்.

அதிக வார்டுகள்

நிறைந்த பகுதிகள்

மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதியாக வடக்கு, மத்திய தில்லி ஆகியவை உள்ளன. கரோல் பாக், ஜாமா மசூதி, ரோஹிணி, படேல் நகர் உள்ளிட்ட 104 வார்டுகள் அவற்றில் வருகின்றன.

வசந்த் விஹார், ஹவுஸ் காஸ், சஃப்தர்ஜங் என்கிளேவ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அதிகம் வசிக்கும் 104 வார்டுகளைத் தன்வசம் கொண்டுள்ளது தெற்கு தில்லி மாநகராட்சி.

கிழக்குத் தில்லியில் நடுத்தரவாசிகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர், ஊடகத் துறையினர் அதிகம் வசிக்கும் இந்திர பிரஸ்தா விரிவாக்கம், மயூர் விஹார், பட்பர்கஞ்ச் உள்பட 64 வார்டுகள் உள்ளன.

மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்குரிய கட்டடம், அவற்றின் அதிகார வரம்புக்கு உள்பட்ட மண்டல அலுவலகங்கள், அதில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் முக்கிய அம்சமாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. எனினும், அதனால் பெரும்பாலும் பலன் அடைந்தவர்கள் ஏற்கனேவே கவுன்சிலர்களாக இருந்தவர்களின் மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிப் பிரமுகர்களின்

இல்லத்தரசிகள்

தில்லி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜிதேந்தர் கொச்சாரின் மனைவி நூடன் கொச்சார் திடீரென்று அரசியலுக்கு வந்து தேர்தல் களம் காண்கிறார்.

தாங்களும் சளைத்தவர் இல்லை என்பது போல், பாஜக மாநிலத் தலைவர் விஜேந்தர் குப்தாவின் மனைவி ஷோபா விஜேந்தரும் வேட்பாளராக களத்தில் இருக்கிறார்.

விஜேந்தர் குப்தா, தன் வீட்டில் பணியாற்றும் ஊழியர் நாக்பாலின் மனைவியான மம்தா என்பவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார்.

செல்போன் மூலமாகவும் வாக்குக் கேட்டு முக்கிய அரசியல் கட்சியினர் ஆதரவு திரட்டினர்.

தமிழர்கள் வசிக்கும் திரிலோக்புரி, இந்தர்புரி, சக்கூர்பூர், ஜனக்புரி உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களுடன் அப்பகுதி வேட்பாளர்கள், தமிழர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமையும் (ஏப்ரல் 15), வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும்.

32 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் என்பது தில்லியின் முக்கியப் பிரச்னையாக உள்ள நிலையில், மாநகராட்சியை பாஜக தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா? என்பது வாக்காளர்களின் விரல் நுனியில்தான் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.