கர்நாடக முதல்வராகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்?

பெங்களூர், ஜூன் 27: கர்நாடகத்தில் தற்போதைய முதல்வர் சதானந்த கெளடாவுக்குப் பதிலாக ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல்வராக பாஜக தலைமையால் அறிவிக்கப்படக் கூடம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.  சட்டவிரோத சுரங
Updated on
2 min read

பெங்களூர், ஜூன் 27: கர்நாடகத்தில் தற்போதைய முதல்வர் சதானந்த கெளடாவுக்குப் பதிலாக ஜெகதீஷ் ஷெட்டர் புதிய முதல்வராக பாஜக தலைமையால் அறிவிக்கப்படக் கூடம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

 சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரம் தொடர்பாக அப்போதைய லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கர்நாடக அரசுக்கு அளித்திருந்த அறிக்கையில், அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

 இதனால், எழுந்த அரசியல் புயலில் 2011, ஜூலை 31-ம் தேதி எடியூரப்பா முதல்வர் பதவியை துறந்தார். எடியூரப்பாவுக்கு மாற்றாக அவரது லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தேவரகுன்டா வெங்கப்பா சதானந்த கெளடாவை புதிய முதல்வராக்கினார் எடியூரப்பா. புதிய முதல்வரை அடையாளப்படுத்தியதன் மூலம் கர்நாடக பாஜக தன் கண் அசைவில் இருப்பதை மேலிடத் தலைவர்களுக்கு எடியூரப்பா உணர்த்தினார்.

 இந்த நிலையில், அதற்கான மற்றொரு சந்தர்ப்பம் எடியூரப்பாவுக்கு மீண்டும் அரும்பியுள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 கர்நாடக முதல்வராக மீண்டும் பதவியேற்கும் கனவு நனவாகாத நிலையில், தன்னை மதிக்காத சதானந்த கெளடாவை தூக்கியெறிய எடியூரப்பா தீர்மானித்துவிட்டார். இதற்காக தலைமை மாற்றம் என்ற வாசகத்தை கடந்த 6 மாதங்களாக எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் பிரசாரமாகவே செய்து வருகிறார்கள்.

 மாற்றம் ஏன்: கர்நாடகத்தின் 26-வது முதல்வராக 2011, ஆக.4-ம் தேதி பதவியேற்றது முதல் பாஜக மேலிடத்துக்கு விசுவாசமாக இருந்த சதானந்த கெளடாவை மாற்ற வேண்டிய காரணம் என்ன? என்பதே பாஜகவில் பலரின் கேள்வியாகும்.

 பாஜகவின் வாக்கு வங்கியாகத் திகழும் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்காததால் பாஜகவின் வாக்குவங்கி அடிவாங்கியுள்ளதாக கட்சி மேலிடம் கருதுகிறது.

 ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த சதானந்த கெளடாவால், அந்தச் சமுதாயத்தின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப முடியவில்லை. பெல்லாரி சட்டப்பேரவைத் தொகுதியில் சுரங்க அதிபரும், முன்னாள் அமைச்சருமான ஜனார்தன ரெட்டியின் வலது கரமாகவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் திகழும் ஸ்ரீராமுலுவை எதிர்த்து பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.

 சதானந்த கெளடா ராஜிநாமா செய்த உடுப்பி-சிக்மகளூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில்கூட காங்கிரஸை வீழ்த்த முடியாமல் பாஜக திணறியது. அண்மையில் நடைபெற்ற சட்டமேலவை பட்டதாரி, ஆசிரியர் தொகுதி தேர்தலில் 6 தொகுதிகளில் 5-ல் பாஜக வென்றாலும், பெங்களூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் சொற்ப வாக்குவித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. மாநில அளவில் கட்சியின் ஆதரவு வீழ்ச்சியை நோக்கி நகர்வதாக பாஜக மேலிடம் சந்தேகிக்கிறது.

 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் 11 சட்டமேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் 6 பேரை வெற்றிபெற பாஜக கடும் வியர்வை சிந்தியது. சொந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், ஈஸ்வரப்பா, பாலசந்திர ஜார்கிஹோளி, அசோக் ஆகியோர் தலைமையிலான அணிகளை கட்டுப்படுத்த சதானந்த கெளடா தவறிவிட்டதாகவே பாஜக கருதுகிறது.

 கர்நாடக கலால் துறை அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்ய உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் சதானந்த கெளடாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், பாஜகவின் அரசியல் எதிரி என்று கருதப்படும் மஜத தேசியத் தலைவர் எச்.டி.தேவகெளடாவிடம் சதானந்த கெளடா ரகசிய நட்பு பாராட்டுவதை பாஜக மேலிடத்துக்கு எடியூரப்பா அணியினர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

 2012, டிசம்பர் அல்லது 2013 ஏப்ரலில் கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் சாமர்த்தியம் சதானந்த கெளடாவுக்கு இருப்பதாக கட்சி கருதவில்லை. இதையடுத்து, சதானந்த கெüடாவை நீக்கிவிட்டு புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 இதுபற்றி விவாதம் நடத்தவே கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் வியாழக்கிழமை (ஜூன் 28) பெங்களூர் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலகும் நேரம் நெருங்கிவிட்டதை சதானந்த கெளடாவின் முகபாவனைகளில் இருந்து உணர முடிவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 அடுத்த முதல்வர் யார்: சதானந்த கெளடாவுக்கு அடுத்தபடியாக முதல்வர் பதவியைப் பிடிக்க பாஜகவில் கடும் போட்டி உள்ளது. முதல்வர் பதவியை கட்சி கொடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று அனந்த்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ராமசந்திர கெளடா ஆகியோர் கூறி வருகிறார்கள்.

 இந்த நால்வரில் ஜெகதீஷ் ஷெட்டர், லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் வாக்கு வங்கியாக திகழும் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க மேலிடம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

 இவர் முதல்வராவதை எடியூரப்பாவும் விரும்புகிறார் என்பது கட்சிக்கு பலம் சேர்க்கும். சதானந்த கெளடாவை நீக்குவதன் மூலம் அவர் சார்ந்த ஒக்கலிகர் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாத பாஜக, அந்த வெற்றிடத்தை நிரப்ப அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.அசோக்கை துணை முதல்வராக்கவும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com