/

தலைநகரில் பரதக் கலை வளர்க்கும் தமிழ்ச் சகோதரிகள்

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆடல் கலையான பரதம், தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்திய மக்களும் பயில விரும்பும் கலையாக வளர்ந்து வருகிறது.  இக்கலையை வட இந்தியர்களிடமும், வெளிநாட்டினரிடமும் கொண்டு செல்லும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:10 am

வே.சுந்தரேஸ்வரன்

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆடல் கலையான பரதம், தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்திய மக்களும் பயில விரும்பும் கலையாக வளர்ந்து வருகிறது.

 இக்கலையை வட இந்தியர்களிடமும், வெளிநாட்டினரிடமும் கொண்டு செல்லும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்த தில்லிவாழ் பரதக் கலைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். தலைநகரில் பரதக் கலைக்கூடங்கள், நாட்டியாலயாக்கள் வளர்ந்து வருவதே இதற்குச் சான்று.

 தில்லியில் கிரீன் பார்க் பகுதியைச் சேர்ந்த ஜானவி (30), தாரிணி (25) ஆகிய தமிழ் பேசும் இளம் சகோதரிகள் இருவர், பள்ளிச் சிறார்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் பரதத்தைப் பயிற்றுவிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

 தில்லி லோதி ரோட்டில் உள்ள லோக் கலா மஞ்ச் அரங்கத்தில் எதிர்கால பரதக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அவர்களிடம் பேசினோம்.

 21 ஆண்டுகளாக பரதக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஜானவி கூறியதாவது:

 சனி, ஞாயிறு வகுப்புகள்

 தனியார் நிறுவனத்தில் "கிளையன்ட் ரிலேஷன்ஷிப்' மேலாளராக பணியாற்றுகிறேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டியக் கலைப் பயிற்சியை அளிக்கிறேன். மனதுக்குப் புத்துணர்வும், கலையை வளர்ப்பதற்கு சமூகத்தில் நம்மால் இயன்ற பணியைச் செய்யும் வாய்ப்பாகவும் இதைக் கருதுகிறேன்.

 13 ஆண்டுகளாக லோக் கலா மஞ்சில் பரத நாட்டியம் கற்றுத் தருகிறேன். தொடக்கத்தில் 3 குழந்தைகளுடன் ஆரம்பித்த இப்பள்ளியில் தற்போது 65 மாணவியருக்கு மேல் கற்கின்றனர். 6 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பரதம் பயில்கின்றனர்.

 செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் எனது மாணவிகள் இருவரின் நாட்டிய அரங்கேற்றம் இந்த அரங்கில் நடைபெற உள்ளது.

 எனது பெற்றோர் மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். தந்தை எஸ். ராஜாராமன் ஆடிட்டராக இருக்கிறார். சிறு வயதில் இருந்தே பரத நாட்டியத்தின் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு. பெற்றோரும் மிகுந்த ஊக்கம் அளித்தனர்.

 பரதக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் அவர்களிடம் நாட்டியம் பயின்றேன். எனது குருவும் அவர்தான். 2000-ம் ஆண்டில் அரங்கேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு நாட்டியப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.

 பி.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ. (தகவல்தொடர்பு) மற்றும் பரத நாட்டியத்தில் டிப்ளமோ பெற்றுள்ளேன்.

 வட இந்திய குழந்தைகளே அதிகம்

 என்னிடம் நாட்டியம் பயிலும் மாணவியரில் 20 பேர் தமிழ்க் குழந்தைகள் மற்றவர்கள் வட இந்தியக் குழந்தைகள்தான். அவர்களுக்கு பரதத்தின் மீது ஈடுபாடு அதிகரித்து வருகிறது. அவர்களது பெற்றோரும் அவர்களை ஊக்குவிப்பதைக் காண முடிகிறது.

 பரதம் என்பது உடல் அசைவுகளை மட்டுமே வெளிப்படுத்தும் ஒரு கலையல்ல. மன அழுத்தத்தைத் குறைக்கவும், மற்றும் உடல் நலத்தைக் காக்கவும் உதவும் ஓர் உன்னதக் கலை. தெய்வீகக் கலையும்கூட.

 பரதத்தின் மீது அதிகரித்துவரும் ஆர்வம்

 பரதம் கற்க வரும் குழந்தைகளிடமும் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறேன். படிப்பில் அதிக கவனம் செலுத்தும்போதோ, பாடச்சுமை, தேர்வு காரணமாகவோ குழந்தைகளுக்கு ஏற்படும் மன இறுக்கம், பரதம் கற்பதால் நீங்குகிறது.

 கிரீன்பார்க்கில் "தபஸ்' என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறேன். கணவர் அச்சின், அப்பா எஸ். ராஜாராமன் ஆகியோரும் என்னை ஊக்குவித்து வருகின்றனர். விரைவில் சிவன் கதையை மையமாக வைத்து நாட்டிய நாடகத்தையும் தயாரிக்க இருக்கிறேன்' என்று கூறுகிறார் ஜானவி.

 கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்.) மூலம் கேமரூன், எத்தியோப்பியா, லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்காக இவர் சென்று வந்துள்ளார். கலாஸ்ரீ, தில்லி யுவ கலாகார் உள்ளிட்ட விருதுகளையும் ஜானவி பெற்றுள்ளார்.

 மனது ஒருமுகப்படுத்தும்

 பரதக் கலை

 ஜானவியுடன் அவரது சகோதரி தாரிணியும் இணைந்து பரத நாட்டியம், இசைப் பாடல்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.

 இது குறித்து, தாரிணி கூறியதாவது:

 நான் பி.காம்., எல்.எல்.பி., முடித்துள்ளேன். சி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறேன். குழந்தைகளுக்கு பரத நாட்டியத்தைக் கற்றுத் தரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிப்பதாகவும் உணர்கிறேன்.

 மனதை ஒருமுகப்படுத்த பரதக் கலை உதவுகிறது. பரதத்துடன் குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள் சொல்லித் தருகிறோம். ஒவ்வொரு அசைவு, நாட்டிய முத்திரைக்கும் அர்த்தம் சொல்லித் தருகிறோம். இப்பணியைத் தொடர்ந்து செய்து, எதிர்காலத்தில் சிறப்பான பரதக் கலைஞர்களை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என்கிறார் தாரிணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.