நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிடிஇஏ 8-ஆவது தமிழ்ப் பள்ளிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்குமா?

தில்லி மயூர் விஹார் மூன்றாவது பேஸில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) எட்டாவது தமிழ்ப் பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான

News image
Updated On :27 மார்ச் 2017, 6:21 pm

வே.சுந்தரேஸ்வரன்

தில்லி மயூர் விஹார் மூன்றாவது பேஸில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) எட்டாவது தமிழ்ப் பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, கட்டுமானப் பணிகளுக்கும் பள்ளிக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் தமிழக அரசு மற்றும் தில்லிவாழ் தமிழர்களிடம் இருந்து டிடிஇஏ நிர்வாகம் நிதியுதவியை எதிர்பார்த்துள்ளது.
90 ஆண்டு பாரம்பரியம்: தில்லியில் டிடிஇஏ கட்டுப்பாட்டின் கீழ் லோதி எஸ்டேட் பகுதி உள்பட ஏழு இடங்களில் பள்ளிகள் நிர்வாகிக்கப்படுகின்றன. இப்பள்ளிகள் 90 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. தொடக்க காலத்தில், "மதராஸி அசோசியேஷன்' மூலம் 1923-ஆம் ஆண்டு சிம்லாவில் ஓர் ஆசிரியர் - ஒரு மாணவருடன் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர், 1924-ஆம் ஆண்டு மந்திர் மார்க் பகுதிக்கு பள்ளி இடம் பெயர்ந்தது. இதையடுத்து, தில்லி லோதி எஸ்டேட் (1951), பூசா சாலை (1953), லக்ஷ்மிபாய் நகர் (1958), மோதிபாக் (1961), ஆர்.கே.புரம் (1964) ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து டிடிஇஏ பள்ளிகள் தொடங்கப்பட்டன.
 1972-இல் "மதராஸி  அசோசியேஷன்' என்பது தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டிடிஇஏ)என பெயர் மாற்றம் பெற்றது. அதன்பிறகு 1975-இல் ஜனக்புரி பள்ளி டிடிஇஏவுடன் இணைந்தது. தற்போது மொத்தம் ஏழு டிடிஇஏ பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.  
இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் எம்.சூர்யநாராயணன், செயலர் ஆர்.ராஜு ஆகியோர் வழிகாட்டுதலுடன் டிடிஇஏ நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளியின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
2014-இல் பூமி பூஜை: இந்நிலையில், மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் பள்ளியின் எட்டாவது பள்ளிக்கான பூமி பூஜை 2014, நவம்பர் 28-இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தின் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு டிடிஇஏ ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகியோரின் பணம், பொருள் உதவியுடன் கட்டுமானப் பணிகளை டிடிஇஏ நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை திங்கள்கிழமை (மார்ச் 27) ஏழு டிடிஇஏ பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டனர். டிடிஇஏ தலைவர் எம்.சூர்யநாராயணன், துணைத் தலைவர் ஆர்.மணி, டிடிஇஏ பள்ளி முதல்வர்கள் ஜி.ஹரிகிருஷ்ணன், ராஜி கமலாசணன், சித்ரா வாசகம், மீனா ஷைனி, காயத்ரி, துணை முதல்வர்கள் சித்ரா மேனன், விசாலாட்சி, டிடிஇஏ ஆயுள்கால உறுப்பினர் வி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றனர்.
ரூ.20 கோடி மதிப்பீடு: எட்டாவது பள்ளியின் பணிகள் குறித்து டிடிஇஏ தலைவர் எம்.சூர்யநாராயணன் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது: மயூர்விஹார் ஃபேஸ் 3-இல் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நிலம், தில்லி வளர்ச்சி ஆணையத்தால் டிடிஏவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது சமதளப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் டிடிஇஏ பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள் உதவியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பிறகு தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு சுமார் ரூ.20 கோடி தேவை என மதிப்பிட்டுள்ளோம்' என்றார்.
டிடிஇஏ செயலர் ஆர். ராஜு கூறுகையில், "டிடிஇஏ தமிழ் பள்ளிகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது புதிய பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 99 அறைகள், ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட வகையில் ரூ.20 கோடி மதிப்பில் இக்கல்வி நிலையத்தை அமைக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு நிதியும் பொருளுதவியும் தேவைப்படுகிறது. தமிழக அரசிடம் நிதியுதவி வழங்குமாறு கோரி கடிதம் எழுதியுள்ளோம்.
தில்லிவாழ் தமிழர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் டிடிஇஏவின் மேம்பாட்டுக்காகவும் புதிய பள்ளியின் கட்டுமானத்துக்காகவும் நிதி, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட உதவிகளை அளித்தால் வரவேற்போம்' என்றார்.
முதல்வர்கள் பெருமிதம்: டிடிஇஏ ஜனக்புரி பள்ளியின் முதல்வர் ராஜி கமலாசணன் கூறுகையில், "தில்லிவாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கு கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக டிடிஇஏ நிர்வாகம் கல்விச் சேவை வழங்கி வருகிறது. நூற்றாண்டு விழாவை நோக்கிச் செல்லும் வேளையில், எட்டாவது பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன' என்றார்.
ஆர்.கே.புரம் டிடிஇஏ பள்ளியின் முதல்வர் சித்ராவாசகம் கூறுகையில், "ஏழு பள்ளிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் டிடிஇஏ நிர்வாகம், எட்டாவது பள்ளியை மயூர்விஹாரில் வாழும் தமிழர்களின் நலன் கருதி அமைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
டிடிஇஏ ஆயுள் கால உறுப்பினர் வி.பார்த்தசாரதி கூறுகையில், "டிடிஇஏ பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் நல்ல நிலைமையில் உள்ளனர். எட்டாவது பள்ளிக் கட்டடத்திற்கான ஆதரவை பொருளுதவியாகவோ அல்லது டிடிஇஏ வங்கிக் கணக்கிலோ நேரடியாக அளிக்க அவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.