தில்லியில் மேஜர் தியான்சந்த் தேசிய விளையாட்டரங்கம், ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம், டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் சரகம், பிஜிடிஏவி கல்லூரி உள்பட 20 இடங்களில் "தொடர் சுற்றுப்புற காற்று தரக் கண்காணிப்பு' நிலையங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
மேலும், காற்று மாசுவுக்கு முக்கிய காரணமான பயிர் கழிவுகள் எரிக்கப்படும் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசும், தில்லி, பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி தில்லித் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மையங்களைத் தொடங்கிவைத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் காற்று மாசு ஏற்பட அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா போன்ற பகுதிகளில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் காரணமாக உள்ளது. இப்பிரச்னையில் அவசர கதியில் முடிவு எடுக்க தில்லி அரசு விரும்பவில்லை. அவ்வாறு முடிவு எடுத்தால் பின்னாளில் இது தில்லி மக்களுக்கு பிரச்னையாக இருந்துவிடக் கூடாது என அரசு கருதுகிறது.
அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான விஷயத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து மத்திய அரசு, தில்லி, பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்த விஷயம் தொடர்பாக கூட்டம் நடத்தி விவாதிக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநில முதல்வர்களுக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.
பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் விஷயத்தில் விவசாயிகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் நிறுத்தும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். உடல் நலக் குறைவு ஏற்படும் போது மருத்துவச் செலவு அதிகமாகிறது. இதனால், நாம் சில நிதிப் பங்களிப்பு நடவடிக்கைகளையும் அளிக்கலாம்.இது நமது அனைவரின் கடமையாகும் என்றார் அவர்.