தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசை கலைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலிடம் தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.
தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தில்லி பாஜக மூத்த தலைவருமான விஜேந்தர் குப்தா தலைமையில் சென்ற தில்லி பாஜக தலைவர்கள், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், "தலைமைச் செயலர் தாக்கப்படும்போது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரும் இருந்துள்ளனர். அவர்கள் உள்பட யாரும் தலைமைச் செயலர் மீதான தாக்குதலைத் தடுக்கவில்லை. ஆகையால், இந்த தில்லி முதல்வர், துணை முதல்வர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் என அனைவருக்கும் இந்த குற்றத்தில் சம பங்கு உள்ளது.
ஆகையால், ஆட்சியில் நீடிக்க தில்லி அரசுக்கு தார்மிக உரிமை இல்லை. தில்லி அரசை உடனடியாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லி அரசில் பணியாற்றும் அதிகாரிகளின் மனதில் அச்சுறுத்தலை விதைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தலைமைச் செயலர் மீதான தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக தில்லி அரசு அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசுப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளன. அரசு அதிகாரிகள் மீது ஆம் ஆத்மி அரசு வன்முறையை ஏவி விடுவது இது முதல் தடவையல்ல.
2015, மே மாதம் அதிகாரிகளுக்கு எதிரான ஆம்ஆத்மி கட்சியினரின் வன்முறையைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் 45 பேர் விடுப்பில் சென்றனர். 2016 , ஏப்ரல் 20-ஆம் தேதி ஆட்சிப் பணியாளர்கள் தினத்தில் பேசிய முதல்வர், அரசின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தியிருந்தார். இந்நிலையில், தற்போது முதல்வர் முன்னிலையில் தில்லி அரசின் தலைமைச் செயலர் தாக்கப்பட்டுள்ளார். அதுவும் அவரது கட்சி எம்எல்ஏக்களே தாக்கியுள்ளனர். எனவே, இச்சம்பவம் தொடர்பாக உயர் நிலை விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தலைமைச் செயலரைத் தாக்கிய எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் பாஜக கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.