சட்டவிரோதமாக ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை தில்லியில் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 24 நவீனரக துப்பாக்கிகள், 20 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பி.எஸ். குஷ்வாஹா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லி காவல் துறையின் தென் சரக சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு சம்பவத்தன்று ரகசியத் தகவல் கிடைத்தது. அதில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார் (40) என்பவர் சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது நடமாட்டத்தை கண்டறியும் வகையில் மத்திய பிரதேச மாநிலம், கார்கோன், பர்ஹன்பூர், சாகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீஸார் அனுப்பப்பட்டனர். இரு மாதங்களாக அவர் குறித்த தகவல்களை போலீஸார் திரட்டி வந்தனர்.
இந்நிலையில், தில்லி சிறப்புப் பிரிவு போலீஸ் ஆய்வாளர் ஷிவ குமாருக்கு புதன்கிழமையன்று ரகசியத் தகவல் கிடைத்தது. அதில், னோத் குமார் சட்டவிரோத ஆயுதங்களை விநியோகம் செய்வதற்காக தில்லி, மேற்கு உத்தர பிரதேசம் பகுதிக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் தில்லி, ஆஸ்ரம் சௌக் அருகே உள்ள சித்தார்த்தா என்கிளேவ் பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த வினோத் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 நவீனரக துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மத்திய பிரதேச மாநிலம், பர்ஹன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர் பர்ஹன்பூரில் சட்டவிரோதமாக ஆயுதங்களைத் தயாரித்து தில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசம், தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆயுத விற்பனையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு துப்பாக்கிகளை கொள்முதல் செய்து ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரைக்கும் விற்று வந்துள்ளார். ஏற்கெனவே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு போலீஸாரால் 2008-ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக காவல் உயர் அதிகாரி பி.எஸ்.குஷ்வாஹா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.