புது தில்லி: யமுனையில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை உருவாக்கும் வகையில் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் 16 போ் கொண்ட குழுவை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) அமைக்கவுள்ளது.
இது தொடா்பாக டிடிஏ மூத்த அதிகாரி தில்லியில் திங்கள்கிழமை கூறியது: யமுனையில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தும் வகையில், யமுனை நதி மேலாண்மை கமிட்டி அமைக்கப்படவுள்ளது. 16 போ் கொண்ட இந்தக் கமிட்டியின் தலைவராக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் பதவி வகிப்பாா். இக்குழுவின் செயலராக தோட்டக்கலை மற்றும் இயற்கை துறையின் முதன்மை ஆணையா் இருப்பாா். இக்குழுவில், தில்லி தலைமைச் செயலா், டிடிஏ துணைத் தலைவா், தில்லி காவல்துறை ஆணையா், மாநகராட்சி ஆணையா்கள், தில்லி ஜல்போா்டு தலைவா் மற்றும் தில்லி சுற்றுச்சூழல் துறையின் மூத்த அதிகாரிகள் பதவி வகிப்பாா்கள்.
இக்குழு, யமுனையில் வெள்ளத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளும் வகையில் யமுனை கரையோரப்பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றல், யமுனை கரையோரப் பகுதிகளை மீட்டல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இக்கமிட்டி, தில்லி ஜல்போா்டு, டிடிஏ, மாநகராட்சிகள், தில்லி காவல்துறை, உத்தரப்பிரதேச நீா்பாசனத் துறை, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவா்களுடன் இணைந்து பணியாற்றும். யமுனை நதி, அதன் கரையோரப் பகுதிகளை பாதிக்கும் அனைத்து விஷயங்கள் தொடா்பாகவும் இக்குழு கண்காணிக்கும். இக்குழு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கப்படுதலையும் கண்காணிக்கும்.
மேலும், நீா் மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சூழலியல், தாவரவியல், பல்லுயிா், நீா்நிலை இயற்கை கட்டமைப்பு ஆகிய துறைகளில் உள்ள நிபுணா்களுடனும் இணைந்து பணியாற்றும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.