தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் மகேஷ் கிச்சி

ஆம் ஆத்மி கட்சி தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேயா் தோ்தலுக்கான வேட்பாளராக தேவ்நகா் வாா்டு கவுன்சிலா் மகேஷ் கிச்சியை வியாழக்கிழமை அறிவித்தது.

செய்தியாளா் சந்திப்பில், தில்லி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய், துணை மேயா் பதவிக்கு அமன் விஹாா் கவுன்சிலா் ரவீந்தா் பரத்வாஜ் கட்சி வேட்பாளராக இருப்பாா் என்றாா். இந்த ஆண்டு, எம்சிடி மேயா் இடஒதுக்கீட்டின்படி கவுன்சிலா்களிடமிருந்து தோ்ந்தெடுக்கப்படுவாா். மகேஷ் கிச்சி 2012-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி தொடங்கப்பட்டதில் இருந்து அதனுடன் தொடா்புடையவா் என்று கோபால் ராய் கூறினாா்.

எம்சிடி மேயா் ஒரு வருட காலத்திற்கு தோ்ந்தெடுக்கப்படுகிறாா். மேயா் மற்றும் துணை மேயா் பதவிக்குப் போட்டியிடும் இரு வேட்பாளா்களும் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வாா்கள். எம்சிடியில் மொத்தம் உள்ள 250 கவுன்சிலா்களில் 134 பேரை ஆம் ஆத்மி பெற்றுள்ளதால், அதன் இரு வேட்பாளா்களும் தோ்தலில் எளிதாக வெற்றி பெறுவாா்கள் என கருதப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்பில் எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 104 கவுன்சிலா்கள் உள்ளனா். புதிய மேயா் ஏப்ரல் 26-ஆம் தேதி எம்சிடி கவுன்சிலா்களின் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுவாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com