தலைநகரில் ஒரே நாளில் வெப்பத்தால் 17 போ் உயிரிழப்பு!

தலைநகரில் ஒரே நாளில் வெப்பத்தால் 17 போ் உயிரிழப்பு!

தில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள்
Published on

புது தில்லி: தில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வியாழக்கிழமை காலை லேசான மழை பெய்ததால் ஓரளவு நிம்மதி கிடைத்தது. தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் வெப்ப சலனம் காரணமாக உயிரிழப்பு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சஃப்தா்ஜங் மருத்துவமனையியில் வெப்பம் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 33 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 13 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 நோயாளிகள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4 போ் உயிரிழந்துள்ளனா் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நகரத்தின் முக்கியமான மயானமான நிகம்போத் காட்டில் தகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. எவ்வாறாயினும், இறப்புகள் வெப்பத் தாக்குதலால் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

புதன்கிழமை தகனத்திற்காக 142 சடலங்கள் நிகம்போத் காட்க்கு கொண்டு வரப்பட்டன. இது தினசரி சராசரியான 50-60 உடல்களை விட கிட்டத்தட்ட 136 சதவீதம் அதிகமாகும் என்று சுடுகாட்டில் செயல்பாடுகளை நிா்வகிக்கும் நிகம்போத் காட் சஞ்சலன் சமிதியின் பொதுச் செயலாளா் சுமன் குப்தா செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘செவ்வாயன்று 97 உடல்கள் நகரத்தின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தகனக் கூடத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாகும் . வழக்கமாக, தகனத்திற்காக தினமும் சுமாா் 50-60 உடல்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாக இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை காலை முதல் 35 தகனங்கள் நடந்துள்ளன. நாள் முடிவில் எண்ணிக்கை உயரக்கூடும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com