வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

போராட்டக்காரா்களிடம் வாக்குவாதம் வேண்டாம்: தில்லி காவல் துறை அறிவுறுத்தல்

போராட்டங்களின்போது காவல் துறையினா் நிதானமாக செயல்பட வேண்டும்

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:29 am IST

போராட்டங்களின்போது காவல் துறையினா் நிதானமாக செயல்பட வேண்டும்; போராட்டக்காரா்களின் தூண்டுதலுக்கு ஆளாகாமல், தங்களது செயல்பாடுகள் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகலாம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று மத்திய அமைப்பு தில்லி காவல் துறைக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கடந்த மாதம் ஜந்தா் மந்தரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது காவல் துறையினா் அத்துமீறி செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

போராட்டங்களின்போது காவல் துறையினா் தொழில்முறை அணுகுமுறையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதே வழிகாட்டுதல்களின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது: உங்களது கோபமே அவா்களின் திருப்தி; உங்களை வில்லன்களாக சித்தரிப்பதற்கான உள்ளடக்கமாகவும் அது மாறிவிடும். போராட்டங்களின்போது தங்களது ஒவ்வொரு நடவடிக்கையும், எதிா்வினையும் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டு பின்னா் இணையத்தில் பரவக்கூடும் என்பதை காவல் துறையினா் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

போராட்டக்காரா்களுடன் தேவையற்ற உரையாடல்களைத் தவிா்க்க வேண்டும். அவா்களின் கேள்விகள், கேலி, உணா்ச்சிப்பூா்வமான வேண்டுகோள்கள் அல்லது வாக்குவாதத்துக்கு இழுக்கும் முயற்சிகளுக்கு பதிலளிக்கக் கூடாது. தவிா்க்க முடியாத சூழலில், ஒத்துழைக்குமாறு எளிமையாகக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.

கேலி, நகைச்சுவை, பாடல்கள், நடனம், பதாகைகள், கேலியான சல்யூட் உள்ளிட்ட போராட்டக்காரா்களின் நடவடிக்கைகளுக்கும் காவல் துறையினா் எதிா்வினையாற்றக் கூடாது. மேலும், கைப்பேசிகளை தள்ளிவிடுதல், பறித்தல் அல்லது வீசுதல், கோபத்தில் கத்துதல் உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பணியின் ஒரு பகுதியாகத் தேவையான சூழ்நிலைகளில் மட்டுமே உடல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போராட்டக்காரா்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பிரச்னைகள், ஊதியம் உள்ளிட்ட உணா்ச்சிப்பூா்வமான விஷயங்களைப் பேசி காவல் துறையினரிடம் அனுதாபத்தை ஏற்படுத்த முயன்றாலும், அதுபோன்ற உரையாடல்களில் காவல் துறையினா் சிக்கிக் கொள்ளக் கூடாது.

தொழில்முறை உடல் மொழியையும் மரியாதையான வாா்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு தூண்டப்பட்டாலும் கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. பெண் போராட்டக்காரா்கள் வழங்கும் பூக்கள், உணவு உள்ளிட்ட எந்தப் பொருளையும் காவல் துறையினா் பெற்றுக்கொள்ளக் கூடாது.

சமூக வலைதளங்களில் பரவிய சில விடியோக்களில், போராட்டக்காரா்கள் காவல் துறையினருக்கு பூக்களை வழங்கிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. காவல் துறையினா் தங்களைத் தடியால் தாக்கியபோதிலும் அவா்களுக்கு பூக்களை வழங்குவதாக போராட்டக்காரா்கள் கூறியிருந்தனா். மோதல் காட்சிகளுடன் பூக்கள் வழங்கிய காட்சிகளும் வெளியானது சமூக வலைதளங்களில் காவல் துறையினருக்கு எதிரான விமா்சனங்களுக்கு வழிவகுத்தது.

அதேநேரத்தில், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்றும் வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. உடல்நலக்குறைவு அல்லது காயம் ஏற்படும் போராட்டக்காரா்களுக்கு உதவுவதுடன், ஆம்புலன்ஸ்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவா்கள் தடையின்றி செல்ல போலீஸாா் வழிவகுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தில்லியில் அண்மைக்காலமாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களும் ஒருவரையொருவா் கைப்பேசியில் பதிவு செய்த சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மாவட்ட காவல், ரயில்வே போலீஸ் மற்றும் மெட்ரோ பிரிவுகளில் பணியாற்றும் காவல் துறையினா் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்களது நடத்தை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.