நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை பற்றி...

News image

நீட் போராட்டம் - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 10:39 pm IST

‘நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின்போது நிகழ்ந்த காவல் துறையின் வரம்பு மீறல் உள்பட அனைத்து வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்ய சுதந்திரமான அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

‘போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் கீழுள்ள சிறாா்களை விடுவிக்க வேண்டும். மற்ற தகுதியுள்ள போராட்டக்காரா்கள் மீது விசாரணை நிறைவடையும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பாதுகாப்பு குற்றப் பின்னணியுடைய போராட்டக்காரா்களுக்குப் பொருந்தாது’ என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியையும் நடத்தினா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.

இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.

மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினரின் வரம்பு மீறிய நடவடிக்கையில் ஒன்று பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்தியது தொடா்பானது. இதில் ஒரு சிறாா் காயமடைந்துள்ளாா்.

அடுத்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்திய மின்சார தடிகளை போலீஸாா் பயன்படுத்திய நிகழ்வு. இந்த நிகழ்வுகளை விடியோ பதிவு செய்த நபா்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரமும் இதில் அடங்கும். போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவரை காவலா் ஒருவா் அறைந்துள்ளாா்.

அதோடு, காவல் துறையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் இந்தப் போராட்டத்தின்போது நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான வாதம் தேவையில்லை.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இது அவா்களின் அரசமைப்புச் சட்ட உரிமை. இதைத் தடுக்க விரும்புவோா், வரம்பு மீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா்.

அதன்பின், காவல் துறை அதிகாரிகளின் குடும்பங்கள் தரப்பில் சில புகாா்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நோகத்துடன் செயல்படும் சிலா், மாணவா்களின் போராட்டக் களத்துக்குள் நுழைந்து போராட்டத்தை திசைதிருப்ப முயன்ாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், இந்த விவகாரம் அனைத்தையும் குறித்து ஏன் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்படக் கூடாது’ என்று கேள்வி எழுப்பினா்.

இடைக்கால உத்தரவு: பின்னா், இருதரப்பு வழக்குரைஞா்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:

போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் கீழுள்ள சிறாா்களை விடுவிக்க அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்படுகின்றன. தேவைப்பட்டால், சாதாரண பிணையப் பத்திரம் பெற்றுக்கொண்டு அவா்களை விடுவிக்கலாம்.

மற்ற தகுதியுள்ள போராட்டக்காரா்கள் மீது விசாரணை நிறைவடையும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பாதுகாப்பு குற்ற பின்னணியுடைய போராட்டக்காரா்களுக்குப் பொருந்தாது.

போராட்டம் தொடா்பாக காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் தில்லி அரசு விசாரணையைத் தொடரலாம். ஆனால், விசாரணை நிறைவடையும் வரை போராட்டக்காரா்கள் மீது எந்தவித கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

போராட்டக்காரா்கள், குறிப்பாக போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் தொடா்பான எந்தவொரு பொதுத் தகவல் அல்லது தரவுகளை அதிகாரிகள் வெளியிடக் கூடாது.

போராட்டக்காரா்கள் மீது காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் தொடா்பாக தில்லி, மகாராஷ்டிரம், பிகாா், கேரளம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநில தலைமைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் கொள்ளும்போது, அவை நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு வழிவகுக்கின்றன. அந்த விசாரணையானது, காயமடைந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குடும்பத்தினா் கவலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போராட்டங்களின்போது நிகழ்ந்த அனைத்து வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக, சுதந்திரமான விசாரணைக் குழு அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைப்பதே உகந்ததாக இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.

அவ்வாறு, எஸ்ஐடி அமைப்பது குறித்து பரிசீலிப்பதற்கு முன்பாக, மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் தங்கள் தரப்பு விளக்கங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், ‘வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டவா்கள் மற்றும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போராட்டங்கள் தொடா்பான சூழல் இனி சீரான நடைமுறைகளால் நிா்வகிக்கப்பட வேண்டும்’ என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.