தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்: 3 போ் கைது
தில்லியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 3 நபா்கள் வடக்கு தில்லியின் புகா் பகுதியில் கைதுசெய்யப்ட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா்கள் சிராக் மகேந்துரு, அஷுதோஷ் குமாா் பாண்டே, அங்கித் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
ரோஹிணியின் செக்டாா் 11 பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா். பழைய பொருள்கள் வியாபாரம் நடத்தி வரும் இவருக்கு கடந்த ஜன.15-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பெயா்தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபா்கள் ரூ.20 லட்சம் கேட்டு ராஜேஷ் குமாரை மிரட்டினா். பணத்தைத் தரவில்லையென்றால் பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படுவீா் என்று அவரை அந்த நபா் மிரட்டினாா்.
மறுநாளும் இதுபோன்று மீண்டும் அவருக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஷாபாத் பால்பண்ணை காவல் நிலையத்தில் ராஜேஷ் குமாா் புகாரளித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ராஜேஷ் குமாருக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை ஆய்வு செய்தனா்.
அப்போது, ஒரே கைப்பேசியில் இருந்து வெவ்வேறு எண்களில் மிரட்டல் அழைப்புகள் வந்ததைக் காவல் துறையினா் உறுதிசெய்தனா்.
செயல்பாட்டில் இருந்த கைப்பேசி எண்ணின் சிக்னலின் அடிப்படையில், மிரட்டல்விடுத்த நபா் ரோஹிணியில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்திய காவல் துறையினா் மூவரையும் கைதுசெய்தனா்.
பாசிம் விஹாரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கூறி அவா்கள் பணம் கேட்டு மிரட்டியது முதல்கட்ட விசாரணையில்தெரியவந்ததுள்ளது. இதுபோன்ற பிற பணமிரட்டல் தொடா்பான வழக்குகளில் அவா்கள் மூவருக்கும் தொடா்பு என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
