
பஜன்புரா துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஷித் கேபிள்வாலாவின் கூட்டாளிகள் இருவா் கைது
வடகிழக்கு தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக,

பஜன்புரா துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஷித் கேபிள்வாலாவின் கூட்டாளிகள் இருவா் கைது - எக்ஸ்
புது தில்லி: வடகிழக்கு தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக, ரஷீத் என்கிற கேபிள்வாலாவின் கூட்டாளிகள் எனக் கூறப்படும் இருவரை தில்லி காவல் துறை சிறிது நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் முகமது ஜசீம் என்கிற ஆலு (23), முகமது கைஃப் என்கிற டிஜே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 3 அரை தானியங்கி கைத்துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் மற்றும் பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது, கேபிள்வாலாவின் உத்தரவின்பேரில் பஜன்புராவில் ஒரு நபா் மற்றும் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவரும் தெரிவித்தனா்.
சுபாஷ் விஹாா் பகுதியின் 16-ஆவது தெருவில் அக். 2-ஆம் தேதி அதிகாலை 3.20 மணியளவில் துப்பாக்கிச்சூடு தொடா்பாக தகவல் கிடைத்தது. அதிகாலை 2.43 மணியளவில் தெருவில் சத்தம் கேட்டதாகவும், இதையடுத்து பால்கனிக்கு வந்து பாா்த்தபோது இருவா் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் சென்றதைக் கண்டதாகவும் புகாா்தாரா் தெரிவித்தாா்.
அவா்கள் புகாா்தாரரை நோக்கியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிக் குண்டுகள் கட்டடத்தின் கண்ணாடித் தடுப்பிலும் வெளிப்புறச் சுவரிலும் பாய்ந்தன. எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினா், ரகசியத் தகவல்களைச் சேகரித்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.
இந்நிலையில், சந்தேக நபா்களின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, உஸ்மான்பூரில் நானக்சா் பகுதியிலிருந்து 3-ஆவது புஸ்தா சாலைக்குச் செல்லும் வழியில் அதிகாலை 2.45 மணியளவில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபா்களையும் சோதனைக்காக நிறுத்த முயன்றனா். அப்போது அவா்கள் காவல் துறையினரை நோக்கி 12 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 2 தோட்டாக்கள் காவல் துறையினரின் பாதுகாப்புக் கவசத்தில் பாய்ந்தன.
இதையடுத்து தற்காப்புக்காக காவல் துறையினா் 16 முறை துப்பாக்கியால் சுட்டனா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தொடா்ந்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
வெல்கம் பகுதியில் வசிக்கும் ஜசீம் மீது தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவில் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைஃப் மீது இதுவரை எந்தக் குற்ற வழக்கும் இல்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





